2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்று, அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. காங்கிரஸ் அதிமுக கூட்டணி. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீண்டும் வெளி உலகிற்கு வந்து புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் எண்பதுகளின் இறுதியில் இருந்தது போன்ற ஆதரவு உள்ளது. அப்போதும் (அப்போதுமா ?) சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதி இருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு பெருகுவதைக் கண்டு, நளினியை சிறையில் இருந்து விடுதலை செய்கிறார் செல்வி.ஜெயலலிதா. இதைக் கண்டதும், கடுப்படைந்த கருணாநிதி, உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் இதோ..
உடன்பிறப்பே,
இன்று நளினியை அந்த அம்மையார் விடுதலை செய்ததை ஊடகங்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. கோபுரத்தின் மேல் உட்கார்ந்து எக்காளச் சிரிப்பு சிரிக்கிறார் அந்த அம்மையார். தன் கணவரை கொன்றவரை விடுதலை செய்தார் என்ற கோபம் சிறிதும் இல்லாமல், இவரோடு கூட்டணி வைத்துக் கொண்டு, இவர் கொள்ளைக்குத் துணை போகிறார் அந்த இத்தாலி கோமகள்.
பெரியார் பிறந்த மண்ணிலே, தமிழனுக்கு எதிராக தமிழிலேயே எழுதும் ஊடகங்கள், அந்த அம்மையார் நளினியை விடுதலை செய்ததை மகத்தான சாதனையாக கருதி தலையங்கங்கள் எழுதுகின்றன. இந்த ஏடுகள் அறியா நளினியை விடுதலை செய்ய நான் எடுத்த முயற்சிகள். தமிழகத்தையும், தமிழினத்தையும் இன்று பீடித்திருக்கும், இந்தப் பார்ப்பனீயக் கூட்டம் இன்று தமிழின ஆதரவு வேஷம் போடுவதை நாடு நெடுநாள் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருக்காது.
நளினிக்கு மட்டுமா ? இன்று புலிகள் இயக்கத்துக்கு தலைமை தாங்கி, புறநானூற்றுத் தமிழனின் வீரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும், என் அருமைத் தம்பி பிரபாகரனுக்கு ஒரு நெருக்கடி என்று அறிந்தவுடன், நான்கு மணி நேரம், எனக்குப் பிடித்த நாட்டுக் கோழி குழம்பைக் கூட சுவைக்காமல், கடற்கரையிலே, அறிஞர் அண்ணா துயிலும் இடத்தில் அவர் காலடியிலே, ‘போர் நிற்க வேண்டும்‘ ‘என் அருமைத் தம்பியின் உயிர் காக்கப் பட வேண்டும்‘ என்பதற்காக 2009லேயே குரல் கொடுத்தவன் நான் என்பதை, இந்தப் பார்ப்பன ஏடுகள் மறந்திருந்தாலும், முன்னணி நாளேடான முரசொலியில் பதிவு செய்திருப்பதை காலம் காணத் தவறாது.
நான்தான் தமிழ் என்று நாள்தோறும் சொல்லி விட்டு, ஆங்கிலம் படித்து, அகந்தை பிடித்து, ஆட்சி இருக்கிறது என்று ஆணவத்தில் ஆடும் அந்த அம்மையாரை வாழ்த்திக் கொண்டிருக்கும், பதராகிக் போன என் அன்புத் தம்பி வைரமுத்து அறியாததா ஈழத் தமிழருக்காக நான் பட்ட இன்னல் ?
ஈழத் தமிழருக்காக என் உடல் பொருள் (தப்பு) ஆவி அனைத்தையும் அர்பணித்த என்னையா இந்த அற்பப் பதர்கள் கேள்வி கேட்கிறார்கள் ?
நளினியை விடுதலை செய்ய நான் எடுக்காத முயற்சிகளா ? 2010லே, நளினியை விடுதலை செய்ய ஆலோசனைக் குழுமத்தை அமைத்ததே கழக அரசுதான் என்பதை நாடு மறக்காவிட்டாலும் இந்த ஏடுகள் மறந்து விட்டது அந்த அம்மையாரின் சூழ்ச்சியல்லாமல் வேறு என்ன ?
ஆலோசனைக் குழுமத்தை அமைத்தவன் நான் என்றாலும், அதன் உறுப்பினர்கள், கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்பதற் காகவே நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று பரிந்துரை செய்தது யார் குற்றம் ? குழுமத்தின் குற்றமா, குழுமத்தை அமைத்தவன் குற்றமா ?
நான் முதலமைச்சராக இருந்தபோதும், எனக்குக் கீழே பணியாற்றிய ராயப்பேட்டை ஆய்வாளர் நளினியை விடுதலை செய்தால், அமெரிக்க தூதரகத்துக்கு ஆபத்து என்று சொல்லியது நான் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதால் எனது ஆட்சிக்கு அவப்பெயர் தேடித்தர வேண்டும் என்ற காரணத்தைத் தவிர வேறு என்ன ?
இவ்வாறு அந்த ஆய்வாளர் அறிக்கை தருவார், அதற்கு என் வீட்டையும் பாதுகாப்புக் காரணத்துக்காக காட்டுவார், அதனால் ஒரு தமிழச்சியின் விடுதலை தடைபடும் என்ற காரணத்தினாலல்லவா நான் அமெரிக்க தூதரகம் பின்புறம் இருக்கும் எனது கோபாலபுரம் வீட்டை அரசுக்கு எழுதிக் கொடுத்தேன் ?
என்னுடைய தமிழையும், தமிழாய்ந்த அறிவையும், கற்றுக்கொள்ளாமல், என்னிடம் உள்ள காலித்தனத்தை மட்டும் கற்றுக் கொண்டு, என்னோடு, கோபலபுரத்தில் வசிக்கும், கழக உடன்பிறப்புகளால், நளினிக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும் என்றல்லவா நான் நளினி ராயப்பேட்டையில் வசிப்பதை தடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தேன்.
கோபாலபுரம் வீட்டை எழுதிக் கொடுத்தேன் என்ற ஒரே காரணத்துக்காக, அது என் மறைவுக்குப் பிறகு என்று அதன் கீழே நான் எழுதியிருந்த குறிப்பை படிக்காமல் இந்த அம்மையார் என் வீட்டை நர்சுகள் தங்கும் விடுதியாக அறிவித்திருப்பது நான் தமிழன் என்பதனால் அல்லாமல் வேறு எதனால் ?
வேறு யாருக்கும் சொல்லாத ரகசியம் ஒன்றை உனக்கு மட்டும் சொல்கிறேன் உடன்பிறப்பே. நளினி எனக்கு ரகசிய தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். அத்தகவலில் வீரத் தமிழச்சி நளினி சொல்லியிருந்த சேதி என்னவென்று அறிவாயா ? “நான் இப்போது இருக்கும் சிறையில் இருந்து வெளியே வர எனக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நீங்கள் என்னை வெளியே விட்டீர்கள் என்றால், கோடானு கோடி, கழக உடன்பிறப்புகளைப் போல, உங்கள் இதயத்தில் என்றென்றும் நான் சிறையிருக்க நேரிடும். அதனால் என்னை சிறையை விட்டு வெளியே விடாதீர்கள்“ என்ற தகவலை அந்த வீரத் தமிழச்சி எனக்கு அனுப்பியிருந்ததை, அந்த அம்மையார் அறிவாரா ?
என் அம்மாவோடு வசிக்கப் போகிறேன் என்று, நளினி கூறியதை, நான் அந்த அம்மையாரோடு வசிக்கப் போகிறார் என்றல்லவா தவறாகக் கருதி விட்டேன் ? அந்த அம்மையாரோடு வசிக்க மாட்டேன் என்று நான் அறிந்திருந்தால், அண்ணா அறிவாலயத்தில் அல்லவா அந்த வீரத்தமிழச்சிக்கு இடம் அளித்திருப்பேன் !
இந்திய அமைதிப் படை இலங்கையில் செய்த அட்டூழியங்களை அறிந்தவர்கள் கூட, அந்தப் படை திரும்பி வருகையில் வரவேற்க செல்லுகையில், அப்போது மத்தியிலே இருந்த அரசுடன் கூட்டணி இல்லாத காரணத்தால் அமைதிப் படையை வரவேற்கச் செல்லாமல் நான் இருந்ததை தமிழ் கூறும் நல்லுகம் மறக்குமா ,
இத்தாலிக் கோமகள் சோனியா கோபித்தாலும் பரவாயில்லை என்று, நளினியை விடுதலை செய்வதற்கு இரண்டு முறை ஆலோசனைக் குழுமம் அமைத்தது கழக அரசு அல்லவா ?
நளினியைச் சிறையிலிருந்து நான் விடுதலை செய்யவில்லை என்று கூறுகிறார்களே … …
நான் மட்டும் கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும், அறிவாலயத்திலும் நாள்தோறும் சிறையிருக்கவில்லையா ? இப்போது கூட நான் விரும்புவது என்ன ? தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையில் என்னை நிரந்தரமாக சிறை வையுங்கள் என்றுதானே கேட்கிறேன் ? எனக்கு மட்டுமா சிறைவாசம் வேண்டும் என்று கேட்கிறேன் ? எனது மகன்களை முதல்வர் அறைக்கு பக்கத்தில் துணை முதல்வர் அறையில், சிறையில் அடையுங்கள் என்றால் அவர்கள் இரண்டு பேரும், ஒரே அறையில் இருக்க மாட்டேன் என்கிறார்கள். நான் என்ன செய்வது ?
இப்போது மட்டும் மத்திய அரசு, இந்த அம்மையாரின் ஆட்சியை கலைத்து விட்டு, என்னை மீண்டும் முதல்வராக்கட்டும். மீண்டும் நளினியை கைது செய்து மீண்டும் விடுதலை செய்ய கழக அரசு என்றுமே தயங்காது என்பதை தமிழ் கூறும் நல்லுலகு அறியும். இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே ?
அன்புடன் மு.க.
சவுக்கு