தலைப்பை பார்த்து விட்டு, இந்தப் பதிவு ஏதோ சிலப்பதிகாரம் தொடர்பானது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்தப் பதிவு, சிலப்பதிகாரம் பற்றியது அல்ல. எல்காட் நிறுவனத்தில் உள்ள இளங்கோவன் என்ற ஒரு அதிகாரியின் சித்து விளையாட்டைப் பற்றியது.
எல்காட் நிறுவனம் என்பதன் பணி என்ன ? தமிழகத்தின் அனைத்துத் துறைகளுக்கும், கணினி வாங்கித் தருவது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கணினி வாங்குவது, நில ஆவணங்கள் மற்றம் பத்திரப் பதிவுத் துறை ஆவணங்களை கணினி மயப்படுத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவதை கணினி மயப் படுத்தவது உள்ளிட்ட முக்கியப் பணிகளை செய்து வரும் தமிழக அரசின் நிறுவனம் தான் எல்காட்.
இந்த எல்காட் நிறுவனம், ஒரு துணை நிறுவனத்தை துவக்கி, அரசுப் பணம் 700 கோடி ரூபாயை கபளீகரம் செய்ததை ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், தான் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற ஆவணங்களில் தெளிவாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார்.
ஆவணங்களோடு தெள்ளத் தெளிவாக, அரசு முதலீடு செய்திருந்த ஒரு நிறுவனம், ஒரே நாளில் எப்படிக் காணாமல் போனது என்றும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும் அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்குப் பதிலாக அவரை பணி இடை நீக்கம் செய்தது கருணாநிதி அரசு.
உமாசங்கருக்கு தலித் அமைப்புகளிடமிருந்தும், மற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலிருந்தும் கிடைத்த ஆதரவை பார்த்த கருணாநிதி அரசு, பயந்து பின் வாங்கியது. ஆனால் உமாசங்கருக்கு கிடைத்திருக்கும் டான்சி மேலாண்மை இயக்குநர் என்ற புதிய பதவி, அவரை மேலும் சிக்கலில் ஆழ்த்தவே என்று சவுக்கு பார்க்கிறது. அந்தத் துறையில் ஏதாவது ஒரு புகாரில் உமா சங்கரை சிக்க வைக்கவே இந்த பணி நியமனமோ என்ற சந்தேகம் சவுக்குக்கு உள்ளது.
உமாசங்கர் அவர்கள் மேலும் கவனமாக, தான் கையெழுத்துப் போடும் கோப்புகளில் அதிக கவனத்தோடும், தொலைபேசியில் பேசும் உரையாடல்களில் ஜாக்ரதை உணர்வோடும் இருக்க வேண்டும் என்று சவுக்கு கேட்டுக் கொள்கிறது. ஏனெனில், சாதாரணமாகவே, சகட்டு மேனிக்கு அனைவரது போனையும் ஒட்டுக் கேட்கும், நபர்கள் உளவுத் துறையில் இருப்பதால், இவரது மொபைல், வீட்டுத் தொலைபேசி மற்றும், அலுவலகத் தொலைபேசி கட்டாயமாக ஒட்டுக் கேட்பில் இருக்கும் என்று சவுக்கு நம்புகிறது.
இந்த எல்காட் நிறுவனம், அரசுத் துறைகளுக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும், டெண்டர் விடுகிறது. இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளும் இது போல ஓபன் டெண்டர் மூலமாகவே பெறப் படுகின்றன.
இந்த டெண்டர்கள் பரிசீலனை செய்யப் படுகையில் L1, L2, L3 என்று மூன்று வகையாக பரிசீலிக்கப் படும். L1 என்றால் Lowest Rate 1 என்று பொருள். எல்லா டெண்டர்களிலும், குறைந்த விலையை குறிப்பிட்டிருக்கும் L1க்குத் தான் ஆர்டர் தர வேண்டும். L1ஐ விட்டு விட்டு L2 தேர்ந்தெடுக்கப் படும் பட்சத்தில், அந்த டெண்டர் கமிட்டி அதற்கான காரணங்களை பதிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, L1 நிறுவனத்தின் பொருட்கள் தரமானதாக இல்லை, அந்த நிறுவனம் உடனடியாக குறிப்பிட்ட காலத்துக்குள் பொருட்களை தராது, ஏற்கனவே இது போல டிஃபால்ட் ஆன நிறுவனம் போன்ற வலுவான காரணங்களை பதிவு செய்ய வேண்டும்.
இதனால் பெரும்பாலான நேர்வுகளில் L1 தான் தேர்ந்தெடுக்கப் படும். ஒரு டெண்டருக்கு ரேட்டை அனுப்பும் முன் ஒரு நிறுவனம், அந்த ரேட் கட்டுப் படியாகுமா, சப்ளை செய்ய முடியுமா, இந்த ரேட்டில் லாபம் கிட்டுமா என்பதையெல்லாம் பரிசீலித்துதான் அனுப்பும். சில நிறுவனங்கள், குறைந்த விலையை போட்டு பெரிய அளவில் லாபம் இல்லாவிடினும், அரசு ஆர்டர் கிடைத்தால் அடுத்த ஆர்டரில் லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டு விடுவார்கள். ஆனால், L1 ரேட்டுக்கு மாறாக L2வையோ L3யையோ, தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது.
இந்தச் சிக்கலைத் தவிர்க்க எல்காட் நிறுவனத்திற்கு டெண்டர் கோட் செய்யும் ஒரு நிறுவனம், டெண்டர் எப்படி விட வேண்டும் என்று மின்னஞ்சலில் எல்காட் நிறுவனத்தின் பொது மேலாளரான ஆர்.இளங்கோ என்பவருக்கு ஆரஞ்சு எஜுகேஷன் என்ற மல்டி மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். அந்த மின்னஞ்சலின் தமிழாக்கம் வருமாறு.
டியர் இளங்கோ சார்,
வரக்கூடிய மேன் பவர் டெண்டர் எப்படி விட வேண்டும் என்பது குறித்த எனது எண்ணங்கள்.
சார், இந்த டெண்டரில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், டெக்னிக்கல் சூப்பர்வைசர்கள், ப்ரோக்ராம்மர்கள் என்று பல்வேறு திறன்வாய்ந்த நபர்களின் தேவை இருப்பதால், இந்த டெண்டரில் முக்கியமாக மேன்பவர், டேட்டா என்ட்ரி பணி மற்றும் தொழில் நுட்ப அறிவு தேவையாக இருப்பதாலும், நல்ல தொழில்நுட்ப பின்னணி கொண்ட குழுவினரிடம் இந்த டெண்டர் கிடைக்க வேண்டும் (உதாரணத்திற்கு எங்களின் பின்னணி இது போன்ற தொழில்நுட்ப வல்லுனர்களை பயிற்சி அளித்து அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக அனுப்ப இயலும்)
இதை அடிப்படையாக கொண்டு, டெண்டரில் விண்ணப்பிப்பதற்கான தகுதி கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.
1. ஆண்டுக்கு 2.5 கோடிக்கும் மேலாக கடந்த மூன்று ஆண்டுகள் டர்ன் ஓவர்
2. அரசு மற்றும் அரசு சார் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 40 லட்சத்திற்கு குறையாமல் டேட்டா என்ட்ரி மற்றும் வேலை பார்த்திருப்பதற்கான ஆவணங்கள் மற்றும் டெண்டர் பெற்றதற்கான சான்று.
3. மூன்றில் இரண்டு முக்கிய வேலைகளை (டெட்டா என்ட்ரி, மற்றும் கணினி பயிற்சி ) எடுத்துச் செய்ததற்கான அனுபவம்.
4. அரசுத் துறைகளில் டெண்டர் எடுத்து அதை நிறைவாகச் செய்து முடித்ததற்கான சான்றிதழ்
5. மாநில அளவில் டெண்டர் எடுத்து வேலை முடித்ததற்கான அனுபவம்.
6. உங்கள் கையில் கட்டுப் பாட்டை வைத்துக் கொள்ளும் அளவுக்கு பரிசீலிக்கும் அளவுகோல்கள் (அனுபவம் மற்றும் பரிசீலனைக்குப் பிறகு சிறந்த மூன்று நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப் பட வேண்டும்)
மாநில அளவில் அனுபவம் மற்றும் கூடுதலாக கணினி பயிற்சி மற்றும் டேட்டா என்ட்ரி அனுபவம்.
முதல் சுற்று முடிந்து விலை தொடர்பான பேச்சு வார்த்தைக்கு வரும் முன், மிகுந்த கட்டுப் பாடுகளை விதிக்க வேண்டும். முதல் கட்ட பரிசீலனைக்குப் பின் சிறந்த மூன்று நிறுவனங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். மேலும் ஜீவன் மற்றும் ஸிக்மா நிறுவனங்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் படக் கூடாது. அவர்கள் மிகக் குறைவான விலையை குறிப்பிடுவார்கள், அந்த விலைக்கு நாங்கள் குறைத்து குறிப்பிட முடியாது. இவர்களை வெளியே தள்ளுவதற்கான சிறந்த வழி முதல் கட்ட பரிசீலயின் போதுதான். ஜீவன் நிறுவனத்தை ஏற்கனவே இது போல முதல் கட்ட பரிசீலனையில் தள்ளி விட்டு விட்டோம், அவருக்கும் முதல் கட்ட பரிசீலனைக்குப் பிறகு அடுத்தக் கட்டத்திற்கு வர முடியாது என்பது புரிந்து விட்டது. இரண்டே இரண்டு நிறுவனங்கள் இறுதி கட்டம் வரை வந்து விட்டால் பேச்சுவார்த்தைக்கு இரண்டு பேர்தான் வருவார்கள். எங்கள் நிறுவனத்தை போல ITFS data entry மற்றும் Linux training என்ற எல்லா டெண்டர்களிலும் விலை தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும் போது நாங்கள் தான் L1 ஆக இருப்போம். இந்த உத்தியையே நாம் போகஸ் டெண்டர் மற்றும் மேன்பவர் டெண்டரில் கையாள வேண்டும். இந்த இரண்டு டெண்டர்களையும் நாம் மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். மிகுந்த கட்டுப் பாடுகளை விதித்தால் தான் நாம் முன்னேற முடியும்.
போகஸ் டெண்டருக்கு ஒரு வேலைக்கான மதிப்பீட்டை ஒரு கோடிக்கு உயர்த்தினல் வெறும் நான்கு நிறுவனங்கள் தான் போட்டி போட இயலும். இறுதி கட்டத்திற்க 2 நிறுவனங்கள் தான் வரும். இதை பற்றி சிந்தியுங்கள் சார்.
நீங்களும் நாங்களும் ஒரு சிறந்த அணி இளங்கோ சார். உங்களின் திறமையைப் பார்த்தும், அனுபவத்தைப் பார்த்தும் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் சார். இதற்கெல்லாம் மேலாக நான் உங்களோடு மிகுந்த பாதுகாப்பாகவும், உணர்கிறேன் சார். நான் உங்களோடு உங்கள் வீட்டில் இருப்பது போலவும், உங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவும் உணர்கிறேன் சார். உங்களின் உதவிக்கு மிக்க நன்றி இளங்கோ சார். என்னுடைய இனிமையான கடவுளிடம் நமது இந்த அற்புதமான உறவை என்றென்றைக்கும் பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் சார்.
அன்புடன்
கீதா
இதற்கு இளங்கோ பதில் எழுதுகிறார்.
நன்றி கீதா. ஒரு உறவு பலமாக இருந்து விட்டால், வெளிப்புற சக்திகள் ஏதாவது ஒரு காரணத்திற்காக அதன் மீது தாக்கம் செலுத்தும் வரை அந்த உறவு நீண்ட காலம் தொடரும் என்றே நான் எண்ணுகிறேன். என்னுடைய இமேஜ் பாதிக்காத வரை, தொழில் ரீதியாக என்னால் இயன்றவற்றை நான் உங்களுக்கு செய்கிறேன்.
அன்புடன்
ஆர்.இளங்கோ
பொது மேலாளர் (பி)
எல்காட்
692, அண்ணா சாலை
நந்தனம்,
சென்னை 600035
தொலைபேசி 65512323
(இளங்கோ சார். நான் உங்கள் குடும்பத்தில் ஒருத்தி போல உணர்கிறேன். இந்த அற்புதமான உறவு தொடர வேண்டும்னு கீதா மேடம் எழுதியிருக்காங்களே. என்னா ஒறவு சார் அது ?)
மேற்கூறிய இரண்டு மின்னஞ்சல்களையும், ஒரு அப்பாவி ஊழியர், தற்போது எல்காட்டின் மேலாண் இயக்குநராக இருக்கும் சந்தோஷ் பாபுவுக்கு அவருடைய santynits@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறார்.
அவ்வளவுதான். என்ன நடக்கிறது தெரியுமா ? அந்த ஊழியருக்கு தண்டனை வழங்கப் பட்டு, பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப் படுகிறார்.
இளங்கோ, கலர் டிவி கொள்முதல் செய்யும் பிரிவுக்கு மாற்றப் பட்டு கூடுதல் பொறுப்பை கவனிக்கிறார்.
இந்த ஆரஞ்சு எஜுகேஷன் என்னும் சன் ஐடெக் நிறுவனத்திற்கு தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 7200 மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் டெண்டர் வழங்கப் படுகிறது. இதையடுத்து கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள பல்வேறு ஆர்டர்கள் இதே நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த கேடு கெட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பாருங்கள் ?
இது தொடர்பாக தகவல் தொழில் நுட்ப செயலர் டேவிட் தாவிதாரிடம் புகார் கொடுக்கலாம் என்று பார்த்தால், இந்த நபர் மீது ஏற்கனவே வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக ஒரு குற்றச் சாட்டு.
சரி அமைச்சரிடம் புகார் கொடுக்கலாம் என்றால், பூங்கோதை ஏற்கனவே லஞ்சப் புகாரில் சிக்கிய தனது உறவினருக்காக ஐபிஎஸ் அதிகாரி உபாத்யாயை போனில் தொடர்பு கொண்டு சிக்கியவர்.
இது போன்ற திருடர்களை கருணாநிதி நல்ல பதவி கொடுத்து அலங்கரிக்கிறார். எனக்கு ஒரு வீட்டு மனை, ஒரு Flat தவிர வேறு சொத்து எதுவுமே இல்லை என்று கூறும் ஐஏஎஸ் அதிகாரி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து வழக்கு. எப்படி இருக்கிறது ?
கருணாநிதி அரசில்தான் இது போன்ற கேடுகெட்ட அதிகாரிகள் தலை கொழுத்து ஆடுகிறார்கள்.
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை தொலைபேசியில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளைப் பற்றி விசாரிக்காதே என்று மிரட்டிய ஸ்ரீபதிக்கு தலைமை தகவல் ஆணையர் பதவி. ஊரே நாம் இந்தப் பதவியை ஏற்பதை எதிர்க்கிறதே என்று கொஞ்சமும் சூடு சொரணை இல்லாமல் சிரித்துக் கொண்டே பதவி ஏற்கும் ஒரு ஜென்மம்.
மரியாதைக் குறைவாக எழுதியும் கூட வெட்கமில்லாமல் பதவியை தொடரும் தகவல் ஆணையர்கள்.
ஊழல் வழக்கில் எஃஐஆர் போட பரிந்துரைக்கப் பட்ட அதிகாரியை தலைமைச் செயலாளராக்கி அழகு பார்க்கும் ஒரு முதலமைச்சர்.
தனக்குத் தானே அப்பழுக்கற்ற ஊழியர் என்று சான்றிதழ் கொடுத்துக் கொண்டு, அதை வைத்து வீட்டு மனை வாங்கும் ஒரு அயோக்கியத் தனமான ஐஏஎஸ் அதிகாரி.
ஊரில் உள்ளவர்கள் தொலைபேசியையெல்லாம் ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றியும் சொத்து சேர்த்தது பற்றியும், நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறாற் போல எழுதியும், கொஞ்சமும் வெட்கமில்லாமல் ஆணவத்தோடு திரியும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.
இதை விட கேவலமாக எழுத முடியாது என்று ஒரு மாநகர காவல்துறை ஆணையாளரைப் பற்றி எழுதிய பிறகும், நான் ஊழலுக்கு எதிரானவன் என்று தனக்குத் தெரிந்த பத்திரிக்கையாளரை வைத்து செய்தி வெளியிடும் ஒரு கேவலமான கமிஷனர்.
சரியாகத் தானே சொன்னான் பாரதி
பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று..
ஒரு பேய்க் கூட்டமே அரசாண்டு கொண்டிருக்கிறதே… சாத்திரங்கள் பிணந்தின்னாமல் வேறு என்ன செய்யும் ?
சவுக்கு