Saturday, August 9, 2014

பேய்கள் அரசாண்டால் ?


முகலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்ததும், அந்த இடத்தை பார்வையிட்ட ஜெயலலிதா, முதலில் சொன்னது "சிஎம்டிஏ அதிகாரிகள் மீது எந்தத் தவறும் இல்லை" என்பதே.   எந்த விதமான விசாரணையும் நடக்கும் முன்னரே இப்படி ஒரு சான்றளிக்கும் முதலமைச்சர் ஆட்சி நடத்தும் மாநிலத்தில் என்ன நடக்காது ?

ஒரு சதுர மீட்டர் கூட அனுமதி பெறாமல் பல ஆயிரம் சதுர அடியில், ஒரு மருத்துவக் கல்லூரியை 5 ஆண்டுகளாக நடத்த முடியுமா ?   முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஏ.என்.ராதாகிருஷ்ணன். முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியின் இணையதளத்தில் அக்கல்லூரியைப் பற்றி இப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

A public charitable trust called Sri Muthukumaran Educational Trust was founded as early as March 1984 as Thirumathi. R.Gomathy as Chairperson, Mr. A. Radhakrishnan as Managing Trustee and Thirumathi Meenakshiammal as the trust with the sole aim and object of providing education to the poor in the rural areas in the spire of schooling, arts, science, engineering, educational institutions, medical, dental, nursing and other paramedical courses.

In the line of objects the trust has, the following institutions of repute have been established over the years.

A Hospital with 300 beds at present and to be expanded with 850 beds ultimately was established at Chikarayapuram with all laboratories, others investigation and inpatient treatment facilities and it started functioning catering to the medical needs of the area from September 2008. A medical College was established in the year 2009 in the name and style of Sri Muthukumaran Medical College Hospital and Research Institute, at Chikkarayapuram near Mangadu and has been approved by the Authorities to function from 2010-2011.this institute will fall under the category of Telugu Minority Institution.

This Medical College has been approved by the Ministry of Health and Family Welfare, Govt. of India, New Delhi for admission of150 students in the 1st year MBBS from the Academic year 2010-2011 vide letter No. F.No.U12012/822/2008 -Me (P-II) Dated 14th May 2010.

இந்தக் கல்லூரி ஏறக்குறைய 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். 



இது மைனாரிட்டி கல்வி நிலையம் என்பதால், மொத்தம் உள்ள 150 சீட்டுகளில் 75 சீட்டுகள் அரசுக்கு மீதம் உள்ள 75 இடங்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு.   இந்தக் கல்லூரியில் ஒரு எம்பிபிஎஸ் இடம் சராசரியாக 40 முதல் 45 லட்சம் வரை விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதே கல்லூரி நிர்வாகத்துக்கு சொந்தமாக மீனாட்சி மருத்துவக் கல்லூரி என்று மற்றொரு கல்லூரியும் உண்டு.   இதன் உரிமையாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணனின் மகன் கோகுலும் ஒரு மருத்துவர். இந்த கோகுல் 5 ஆண்டு மருத்துவப் படிப்பை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் மொத்தம் 12 ஆண்டுகள் படித்தார்.   12 ஆண்டுகள் படித்த பொழுது இவர் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா ?   2, 6, 8 இது போல ஒற்றை இலக்க மதிப்பெண்களை மட்டுமே பெற்றார். 

கோகுல்
ஒரு வழியாக 12 ஆண்டுகள் கழித்து எம்பிபிஎஸ் பாஸ் செய்தார் கோகுல். கோகுல் படித்த பாண்டிச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, தொடங்கப்பட்ட காலத்தில் பாண்டிச்சேரி பல்கலைகழகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.  பின்னாளில், அது நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறியது.  கோகுல் படித்த காலத்தில் அது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தோடுதான் இருந்தது.   ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி மதிப்பெண் எடுக்கும் கோகுல் எந்த காலத்திலாவது எம்பிபிஎஸ் பாஸ் செய்வாரா ?  அவரை பாஸ் செய்ய வைக்க, கோகுலின் தந்தை ஏ.என்.ராதாகிருஷ்ணன் அணுகிய நபர்தான் ஜலீஸ் அகமது கான் தரீன் என்ற ஜேஏகே தரீன்.  இவர் அப்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தார்.  தற்போது, க்ரெசன்ட் பொறியியல் கல்லூரியில் இருக்கிறார்.   இவருக்கு கோகுலை பாஸ் செய்ய வைக்க கொடுக்கப்பட்ட தொகை 25 லட்சம் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள். 

பேராசிரியர் ஜேஏகே. தரீன்
துணை வேந்தரின் உதவியோடு மட்டும் எம்.பி.பிஎஸ் பாஸ் செய்து விட முடியுமா ? மற்றவர்களின் உதவி வேண்டாமா ?  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பதிவாளராக உள்ள டாக்டர் ஜே.சம்பத் மற்றும் துணைப் பதிவாளர் டாக்டர்.முரளிதாசன் ஆகியோரின் உதவியோடு ஒரு வழியாக பாஸ் செய்து முடித்தார் கோகுல்.  

எம்பிபிஎஸ் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் படிக்கையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்ற வேண்டும்.  ஐந்தாம் ஆண்டு படிக்கும் கோகுல், நான் எங்களது கல்லூரியான மீனாட்சி கல்லூரியிலேயே ஹவுஸ் சர்ஜன் பணியாற்றிக் கொள்கிறேன் என்று வந்துவிட்டார்.    ஒரே ஒரு நாள், ஒரே ஒரு நாள் கூட ஒரு பேஷன்டைக் கூட கோகுல் பார்த்தது கிடையாது.    இப்படி இறுதியாண்டு கோகுல் படித்துக் கொண்டிருந்தபோதே, முத்துக் குமரன் மருத்துவக் கல்லூரியின் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.   இதற்கு மாதந்தோறும் ஐந்து லட்ச ரூபாய் சம்பளம். 

சரி தற்போது கோகுல் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்பீர்கள். தற்போது கோகுல், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார்.   

கோகுலை பத்து ஆண்டுகள் கழித்து பாஸ் செய்ததற்கு பிரதிபலனாக, துணைப் பதிவாளர் டாக்டர் முரளிதாசனின் மகள் அபிராமி என்பவருக்கு, ஏ.என்.ராதாகிருஷ்ணனின் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வழங்கப்பட்டது.  இந்தப் பெண் தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். 

இந்த கோகுல்தான், இந்த ஆண்டு ஜனவரி மாதம், குடி போதையில், ராகவேந்திரா மருத்துவமனையின் உரிமையாளரை நண்பர்களோடு சென்று தாக்கி, மருத்துவமனையை அடித்து நொறுக்கி, காவல்துறையிடமிருந்து தப்பி ஓடி, பின்னர் கைது செய்யப்பட்டவர்.   

அடித்து நொறுக்கப்பட்ட ராகவேந்திரா மருத்துவமனை
ஏ.என்.ராதாகிருஷ்ணன் ஒரு மிகப்பெரிய கல்வித்தந்தை.   1983ம் ஆண்டு முதன் முதலாக ஒரு பாலிடெக்னிக்கை மட்டுமே தொடங்குகிறார்.  கல்வித்தந்தைகளின் வளர்ச்சி எப்படிப்பட்டது என்பதைத்தான் நாம் ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், ஜெகதரட்சகன் ஆகியோரின் வழியாக பார்க்கிறோமே.  அதே போல அசுர வளர்ச்சி.   அதன் பின் வரிசையாக கல்வி நிலையங்களை தொடங்குகிறார். 

1983-Meenakshi ammal polytechnic college.
1985-Arulmigu Meenakshi Amman college of engineering.
1990-Meenakshi Amman Dental college.
1993-M.G.R. Institute of Hotel management &techmology.
1995-Sri Muthukumaran institute of technology.
1998-Meenakshi Ammal Matriculation Hr.sec.school,
Meenakshi college of Nursing,
Meenakshi college of physiotheraphy.
2001-Meenakshi college of engineering,
Meenakshi ammal Arts and science college,
Sri Muthukumaran Arts and science college.
2002-Vani Vidhyalaya sr.secondary & junior college.
2003-Meenakshi Medical College Hospital & Research institute.
2005-Meenakshi ammal Teacher Training Institute.
2006-Arulmigu Meenakshi college of Education,
Sri Muthukumaran College of Education.
2010-Sri Muthukumaran Medical college Hospital & Research Institute.
2011-Mangadu Public school.
2012-Arulmigu Meenakshi amman public school,
Meenakshi ammal Global school.

எப்படிப்பட்ட கல்வித் தந்தை பார்த்தீர்களா ?  தற்போது இவரது முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரிக்கு, மத்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.   இதை எதிர்த்து தற்போது நீதிமன்றம் சென்றுள்ளார், இதன் தாளாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன். 

ஏ.என்.ராதாகிருஷ்ணன்.
இந்த ஏ.என்.ராதாகிருஷ்ணன், மீனாட்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர்.  இவர் காமர்ஸ் டிப்ளமா படித்து விட்டு, ப்ளஸ் டூ மாணவர்களுக்கு தட்டச்சு மற்றும் அக்கவுன்டன்சி வாத்தியாராக இருந்தார்.  இதுதான் இவரது கல்வித் தகுதி.  இந்தப் பல்கலைக்கழகத்தின் தாளாராக இருப்பவர் ஏ.என்.சந்தானம்.  இவர் ராதாகிருஷ்ணனின் சொந்த சகோதரர்.    இவர் ஓய்வு பெற்ற முனிசிபல் கமிஷனர். இவர்களெல்லாம் சேர்ந்துதான் மேலே பட்டியலிடப்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

தற்போது, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.  அதில் முதல் பத்தியிலேயே அவர் குறிப்பிடுவது, முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, மைனாரிட்டி கல்வி நிலையம் என்ற அடிப்படையில் நடத்தப்படுவது.   மைனாரிட்டி கல்வி நிலையம் என்ற தகுதி எப்படி வருகிறது ?  

1983ம் ஆண்டு, மீனாட்சி அம்மாள் ட்ரஸ்ட் என்ற பெயரில் ஒரு ட்ரஸ்ட் பதிவு செய்யப்படுகிறது.  இந்த ட்ரஸ்ட், தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களுக்காக என்று தொடங்கப்படுகிறது.  இந்த ட்ரஸ்டின் பதிவுப்படி, இதன் நோக்கம், இந்து மதத்தை பரப்புவது, கல்வி நிலையங்கள் நடத்துவது, இந்து கலாச்சாரத்தை பரப்புவது ஆகியன.   

பதிவு செய்யப்பட்ட ட்ரஸ்ட் ஆவணம்.
ஏ.என்.ராதாகிருஷ்ணன், 1958ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் படித்தவர்.  சென்னையைச் சேர்ந்தவர்.  அவர் மனைவியும் சென்னையில் ஆசிரியையாக பணியாற்றியவர்.  இவர்கள் இருவருக்கும் ஒரு வார்த்தை கூட தெலுங்கு பேச வராது.  அப்படி இருக்கையில் இவர்கள் எப்படி தெலுங்கு மைனாரிட்டியாக முடியும் ? 
ராதாகிருஷ்ணனின் எஸ்எஸ்எல்சி சான்றிதழ்

தெலுங்கு மைனாரிட்டி என்ற அடையாளத்தை பெற்றால்தான், அரசின் சலுகைகளை பெற முடியும் என்பதற்காக, 1995ம் ஆண்டு, அசலாக 1983ம் ஆண்டு பதிவு செய்த ட்ரஸ்ட் பத்திரத்தில் திருத்தம் கொண்டு வருகின்றனர்.  அதாவது, தெலுங்கு மக்களுக்காக பாடுபடுவது போல.  இது போன்ற திருத்தங்களை செய்ய, இந்திய சிவில் நடைமுறைச் சட்டப் பிரிவு 92 (3)ன் படி சில விதிமுறைகள் உள்ளன.  அந்த விதிமுறைகளின்படி, நீதிமன்ற உத்தரவின் மூலம் மட்டுமே, ட்ரஸ்டின் அசல் நோக்கங்களை மாற்ற முடியும்.  அப்படி எந்த மாற்றமும், ஏ.என்.ராதாகிருஷ்ணனின் இரு ட்ரஸ்டுகளும் செய்யவில்லை.  ஆனால், தங்கள் வசதிப்படி, தெலுங்கு மைனாரிட்டி ட்ரஸ்ட் என்று மாற்றிக் கொண்டு அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

ஏ.என்.ராதாகிருஷ்ணனின் தந்தையின் பெயர் நடேச பிள்ளை.  நடேச பிள்ளை எப்படி தெலுங்கரானார் என்பது புரியவில்லை.   மைனாரிட்டி கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பான சட்டம் கீழ்கண்டவாறு கூறுகிறது. 

(a)  The educational institution should have been established by a member / members of the minority community.

(b) The educational institution should have been established for the benefit of minority (Religious / Linguistic) Community they belong and in furtherance to the objective of the Original Trust deed and

(c) that the educational institution is being administered / maintained by the minority community.

மைனாரிட்டி சமூகத்தை சேராத ஏ.என்.ராதாகிருஷ்ணன் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு மைனாரிட்டி ஸ்டேட்டஸ் எப்படி வந்தது என்பதே தனி விசாரணைக்குரிய விஷயம். 

இப்படி மைனாரிட்டி ஸ்டேட்டஸ் பெறுவதற்காக, 1995ம் வருடம், காஞ்சிபுரம் மாவட்ட ஆர்டிஓ மூலமாக ஒரு சான்றிதழை பெறுகிறார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.   ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மாள்,  மற்றும் கோமதி ஆகியோரின் தாய்மொழி தெலுங்கு என்று ஆர்டிஓ சான்றிதழ் அளிக்கிறார்.  ஒருவரின் தாய்மொழி என்ன என்பது குறித்து, ஆர்டிஓ சான்றிதழ் அளித்தது வரலாற்றிலேயே முதன்முறையாக இருக்கும். இந்த சான்றிதழின் அடிப்படையில்தான், தனது ட்ரஸ்டுகளுக்கு மைனாரிட்டி ஸ்டேட்டஸ் பெறுகிறார் ராதாகிருஷ்ணன். சென்னையில் உள்ள ஒரு ட்ரஸ்ட் உறுப்பினர்களுக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள ஆர்டிஓ எதற்காக மொழி சான்றிதழ் வழங்குகிறார் என்பதும் வியப்புக்குரிய விஷயம். 

ராதாகிருஷ்ணன் தெலுங்கு மொழி பேசுபவர் என்று ஆர்டிஓ அளித்த சான்றிதழ்

சரி.   முத்துக்குமரன் கல்லூரியையாவது ஒழுங்காக நடத்துகிறாரா என்றால் அதுவும் இல்லை.  ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கென்று, அடிப்படையான சில விதிகள் உண்டு.  அந்த மருத்துவக் கல்லூரிக்கென்று சொந்தமாக இடம் இருக்க வேண்டும்.  அந்த மருத்துவக் கல்லூரியின் கட்டிடங்கள் முறையான அனுமதி பெற்று கட்டப்பட்டிருக்க வேண்டும்.  போதுமான உள்நோயாளிகளுக்கான படுக்கைகள் வேண்டும் என்று பல்வேறு விதிகள் உள்ளன.  

நீல சட்டை அணிந்து உட்கார்ந்திருக்கும் நபர்தான் மூத்த மருத்துவர் கோகுல்
இவற்றில் அடிப்படையான விதி கட்டிடங்கள் முறையாக அனுமதி பெற்று கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதே.  இந்த விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை, மருத்துவக் கவுன்சிலின் ஆய்வாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள்.  அவர்கள் வருகையில், நோயாளிகள், அல்லது ஆசிரியர்கள் ஆகியவற்றில் ஏதாவது குறை இருந்தால், அனுமதி மறுக்கப்படும்.  

2010ம் ஆண்டு முதல் முத்துக்குமரன் கல்லூரி இயங்கி வருகிறது.  மாணவர்கள் படித்து வருகிறார்கள்.    16 மே 2011 அன்று இந்திய மருத்துவக் கவுன்சிலின் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு, இந்தக் கல்லூரியை ஆய்வு செய்ய வந்தது.   அப்போது, இந்தக் கல்லூரி அனுமதி பெற்ற கட்டிடத்தில் இயங்குகிறதா என்ற கேள்விக்கு, அந்தப் படிவத்தில் சிஎம்டிஏ உத்தரவு TN/CMDA/HB  2077 dated 2008 என்ற கோப்பில் அனுமதி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மருத்துவக் கவுன்சில் ஆய்வாளர்களின் படிவம்


அந்த மருத்துவ ஆய்வாளர்களிடம், இது குறித்த ஒரு ஒப்புதல் வரைபடமும் வழங்கப்பட்டுள்ளது.    டிசம்பர் 2009ல், முத்துக்குமரன் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டதா என்று சிஎம்டிஏவுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திக் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, "முத்துக்குமரன் கல்வி நிறுவனத்துக்கு எந்த விதமான அனுமதியும் வழங்கப்படவில்லை" என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.  சரி 2009ல்தான் அனுமதி இல்லை. அதற்குப் பிறகாவது அனுமதி வழங்கப்பட்டதா என்றால், இன்று வரை அனுமதி பெறப்படவில்லை.  ஆனால் அனுமதி பெறப்படாத இந்தக் கட்டிடத்தில் நான்கு ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.  

மருத்துவக் கவுன்சில் ஆய்வாளர்களிடம் வழங்கப்பட்ட போலி ஆவணம்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிஎம்டிஏ அளித்த பதில்

சிஎம்டிஏ அதிகாரிகள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஜெயலலிதா சொன்னார் அல்லவா ?   அந்த சிஎம்டிஏ அதிகாரிகள், 28 ஏப்ரல் 2011 அன்று கல்லூரியை நேரில் ஆய்வு செய்கின்றனர்.   ஆய்வு செய்கையில், கட்டிடம் எவ்வித அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்டு வருவதை காண்கின்றனர்.  உடனடியாக 9 மே 2011 அன்று, கட்டுமான வேலையை நிறுத்துமாறு, அதுவும் மூன்று நாட்களுக்குள் நிறுத்துமாறு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.   அதுவும் நோட்டீஸில் எழுதியுள்ளதைப் பார்த்தால் டெர்ரராக இருக்கிறது.   "மூன்று நாட்களுக்குள் கட்டுமானப்பணிகளை நிறுத்தாவிட்டால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு, பில்டிங்குக்கு சீல் வைக்கப்படும்.  கட்டுமானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.   மேலும், உரிமையாளர் மீது வழக்கு தொடுக்கப்படும்".  இந்த ஓப்பனிங் நன்றாகத்தான் உள்ளது.   

வேலையை நிறுத்துமாறு சிஎம்டிஏ அளித்த நோட்டீஸ்
கட்டிடங்களை இடிக்கப் போகிறோம் என்று டெமாலிஷன் நோட்டீஸ் மீண்டும் வழங்கப்படுகிறது.  ஏப்ரல் 2011ல் கட்டுமானத்தை நிறுத்துங்கள் என்று வழங்கப்பட்ட நோட்டீஸ், அதுவும் மூன்று நாட்களுக்குள் கட்டுமானத்தை நிறுத்துங்கள் என்று வழங்கப்பட்ட நோட்டீஸுக்கு அடுத்த நடவடிக்கை சரியாக ஒரு வருடம் கழித்து எடுக்கப்படுகிறது. 

உங்கள் கட்டுமானம் சட்டவிரோதமான கட்டுமானம்.   26.03.2012 அன்று உங்களிடம் கட்டுமான ஒப்புதல் கேட்டு எழுதிய கடிதத்துக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை.   ஆகையால் உடனடியாக மூன்று நாட்களுக்குள் கட்டிடத்தை பழைய நிலைக்கு திருப்பாவிட்டால், கட்டிடம் இடிக்கப்படும்.  இது அனுப்பப்பட்ட நாள் 25.04.2012.  தற்போது முழுமையாக இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன.  இன்னும் அந்தக் கல்லூரி செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.  

கட்டிடத்தை இடிப்பதற்கான நோட்டீஸ்

இதையடுத்து 1 ஆகஸ்ட் 2013 அன்று இந்திய மருத்தவக் கவுன்சில்,  சிஎம்டிஏவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது.    அந்தக் கடிதத்தில் முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியின் கட்டிடம் மற்றும் மருத்துவமனை கட்டிடம் ஆகியவை அனுமதி பெறாமல் உள்ளதாகவும், அந்தக் கட்டிடங்களை இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம்.   இதன் உண்மை நிலையை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கடிதம் எழுதுகின்றனர். 



இதற்கு என்ன பதில் அளிக்க வேண்டும் ?   கட்டிடத்தை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது உண்மைதான்.   அந்தக் கட்டிடங்கள் இன்னும் அனுமதி பெறவில்லை என்றுதானே எழுதவேண்டும் ?  ஆனால், ஜெயலலிதா, உச்சி முகர்ந்து கொஞ்சிப் பாராட்டிய சிஎம்டிஏ அதிகாரிகள், 4 டிசம்பர் 2013 அன்று, இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதில் அனுப்புகிறார்கள்.    அந்த பதிலில், எதுவுமே சொல்லாமல், முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவது பரிசீலனையில் உள்ளது.   கவுண்டமணி செந்திலை வாழைப்பழம் வாங்கி வரச் சொன்னதற்கு சொன்ன பதில் போல இல்லை ? 

மருத்துவக் கவுன்சிலுக்கு சிஎம்டிஏவின் பதில் கடிதம்
சரி.  இந்த ஊழல் இத்தோடு முடிந்து விட்டதா என்றால் இல்லை. இந்த ஒப்புதல் இல்லாத கட்டிடத்திற்காக, இந்தியன் வங்கியிலிருந்து 130 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.   அது எப்படி ஒப்புதல் இல்லாத கட்டிடத்துக்கு 130 கோடி கடன் என்கிறீர்களா ?   அதற்கென்று தாராள மனம் படைத்த இந்தியன் வங்கி பொதுமேலாளர் ஒருவர் இருந்தார்.  அவர் பெயர் கே.நடராஜன்.    அவர் எதற்காக ஒப்புதல் இல்லாத கட்டிடத்துக்கு 130 கோடி கடன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுமே ?  அதற்கான விடை தற்போது நடராஜன் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டீர்கள் என்றால் புரியும். 

டை கட்டிக் கொண்டு இருப்பவர்தான் நடராஜன்.
தற்போது நடராஜன் மீனாட்சி கல்வி குழுமங்களின் இயக்குநர்.  ஓய்வு பெற்ற பிறகு, ராதாகிருஷ்ணனின் கல்விக் குழுமத்துக்கு இயக்குநராகி விட்டார். இதற்கு பெயர்தான் ஆங்கிலத்தில் QUID PRO QUO. 130 கோடி ரூபாய் மக்கள் பணத்தை வாரி ராதாகிருஷ்ணன் போன்ற கல்விக் கொள்ளையனுக்கு கொடுத்து விட்டு, சொகுசாக அதே நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 


தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்திய மருத்துவக் கவுன்சில் தன் கல்லூரிக்கு 2014-2015 கல்வி ஆண்டுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.    இந்த வழக்குக்காக இவர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களுள் ஒன்று, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை எழுதிய கடிதம் ஒன்று.   அந்தக் கடிதம், மத்திய அரசு வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்திக்கு எழுதப்பட்டது. 

8 ஜுலை 2014 அன்று எழுதப்பட்ட அந்த கடிதத்தில் ஹாஜா மொய்தீன் கிஸ்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில், முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி தாக்கல் செய்திருக்கும் ரிட் மனு எண் 17154/2014 என்ற மனுவுக்கு மத்திய அரசின் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு எழுதப்பட்ட கடிதம்.   இது ஒரு ரகசிய கடிதம் என்று தாராளமாக சொல்லலாம்.  ஒரு கட்சிக்காரர், தன் வழக்கறிஞருக்கு எழுதும் கடிதம் ADVOCATE CLIENT PRIVILEGE என்ற அடிப்படையில் ரகசியமானதே. இந்தக் கடிதத்தை ராதாகிருஷ்ணன், தான் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஆவணமாக இணைத்து தாக்கல் செய்துள்ளார்.   

இந்த ரகசிய ஆவணம் எப்படி ராதாகிருஷ்ணன் கைக்கு வந்தது என்பது மற்றொரு சுவையான கதை.    ஹாஜா மொய்தீன் கிஸ்தி என்ற வழக்கறிஞர் மத்திய அரசின் பட்டியலில் உள்ள 60 வழக்கறிஞர்களில் ஒருவர்.   ஆனால், மருத்துவக் கல்லூரிகள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் அத்தனை வழக்குகளையும் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், ஹாஜா மொய்தீன் கிஸ்தி மட்டுமே ஆஜராகியிருப்பார்.    மத்திய அரசில் பல்வேறு துறைகள் இருக்கும்.   அந்தத் துறைகள் தொடர்பான வழக்குகள் வருகையில், சென்னையில் உள்ள மத்திய அரசின் சட்டத்துறை அந்த வழக்குகளை பரிசீலித்து, எந்த வழக்கு எந்த மத்திய அரசு வழக்கறிஞருக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும்.   

ஹாஜா மொய்தீன் கிஸ்தி (இன்னா ஸ்டைலா கீறாரு பாத்தீங்களா)
ஆனால் ஹாஜா மொய்தீன் கிஸ்தி என்ன செய்வார் தெரியுமா ?  வருமானம் உள்ள வழக்குகள் எதுவென்பதை முன்கூட்டியே நீதிமன்ற அலுவலகம் மூலம் தெரிந்து கொள்வார்.   அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், சட்டத் துறைக்கு செல்வதற்கு முன்பாகவே, இவர் அதன் நகல்களை எடுத்துக் கொள்வார்.  வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகையில், இவரே எழுந்து, மத்திய அரசு சார்பாக நான் ஆஜராகிறேன் என்று நோட்டீஸை எடுத்துக் கொள்வார்.   நீதிபதிக்கு எந்த மத்திய அரசு வழக்கறிஞர் நோட்டீஸ் எடுத்துக் கொண்டால் என்ன ?   அவர்கள் உடனே, மத்திய அரசு வழக்கறிஞர் நோட்டீஸ் எடுத்துக் கொண்டார் என்று பதிவு செய்து விடுவார்கள். 

ஹாஜா மொய்தீன் கிஸ்தி அடுத்ததாக என்ன செய்வார் தெரியுமா ? சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைக்கு, நீதிமன்றம் என்னை இந்த வழக்கில் ஆஜராகச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.  அதனால், இது தொடர்பான அதிகாரியை என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள் என்று கூறுவார்.    

ஹாஜா மொய்தீன் கிஸ்தி 2013ல் ஆஜரான வழக்குகளில் சில

மத்திய அரசின் சட்டத்துறை நியமிக்காமல் இவராகவே ஆஜராவாதால், இவர் ஆஜராவதற்கான கட்டணம், மத்திய அரசிலிருந்து வராது.   ஆனால், அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தானாக முன்வந்து, மத்திய அரசின் அனைத்து வழக்குகளிலும் ஆஜராவார் ஹாஜா மொய்தீன் கிஸ்தி.  இப்படி ஒரு சேவை மனப்பான்மை உள்ள வழக்கறிஞரா என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  

ஏன் என்று பார்ப்போம். ஹாஜா மொய்தீன் கிஸ்தி, மத்திய கப்பல் துறை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆஜராவார். கிட்டத்தட்ட கப்பல்துறைக்கு அவர் மட்டுமே வழக்கறிஞர் என்பது போல, எல்லா வழக்குகளிலும், அவர்தான் ஆஜராவார்.   ஏன் கப்பல் மற்றும் மருத்துவக் கல்லூரி வழக்குகளில் ஆஜராவதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்றால், இந்த வழக்குகளில்தான் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.  பணம் கோடிகளில் கொட்டும். 

இப்படி கோடிகளில் பணம் சம்பாதித்தால்தானே, நீதிபதி தனபாலன் போன்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்கையில், அதன் செலவுகளை ஏற்றுக் கொள்ள முடியும் ?    இப்போது புரிகிறதா ?

சரி.  முத்துக்குமரன் கல்லூரி வழக்கு இவரிடம் எப்படி வந்தது.  மத்திய அரசு இவருக்கு எழுதிய கடிதம், கல்லூரி உரிமையாளரிடம் எப்படி சென்றது என்பது, இன்னொரு கிளைக் கதை.   

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் டாக்டர் விஜயன் என்பவர்.    இவரை ஊழல் பெருச்சாளி என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் மீது, சிபிஐ சொத்துக் குவிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.     இந்த விஜயனும், முத்துக் குமரன் மருத்துவக் கல்லூரி நிறுவனர் ஏ.என்.ராதாகிருஷ்ணனும் சம்பந்திகள்.   ராதாகிருஷ்ணனின் மகன் கோகுலுக்கு, விஜயனின் மகளை திருமணம் செய்து வைத்திருக்கிறார். 

டாக்டர் விஜயன்.
இந்த விஜயனும், ஹாஜா மொய்தீன் கிஸ்தியும் நெருங்கிய நண்பர்கள்.   ஒரு நாளைக்கு பல முறை தொலைபேசிகளில் பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள்.  சம்பந்தியின் மருத்துவக் கல்லூரிக்கு ஒரு பிரச்சினை என்றால், விஜயன் சும்மா இருப்பாரா ? அவர் சொல்லியபடியே, மத்திய அரசின் சார்பாக, ஹாஜா மொய்தீன் கிஸ்தி, உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளார். அந்த அடிப்படையில்தான், மத்திய அரசு இவருக்கு எழுதிய கடிதத்தை எடுத்து ராதாகிருஷ்ணனிடமே கொடுத்துள்ளார். 

இது மட்டுமல்ல.   கல்விக் கொள்ளையன் பச்சமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கி எப்படி தனக்கென்று ஒரு தனி செல்வாக்கை வளர்த்துக் கொண்டாரோ, அதே போல நாமும், ஒரு பத்திரிக்கை அதிபர் ஆகி விட்டால், அரசியல் செல்வாக்கு கிடைக்கும் என்று நினைத்து, ஏ.என்.ராதாகிருஷ்ணன் தொடங்கிய பத்திரிக்கைதான் "தின இதழ்".   இதை வைத்துக் கொண்டு, ஜெயலலிதா யாரையாவது பார்த்து "டாட்டா"  காட்டினால் கூட, அதை முதல் பக்கத்தில் "முதல்வர் கையசைத்தார்" என்று போட்டால், அரசு விளம்பரமும் கிடைக்கும்.   முதல்வரின் கடைக்கண் பார்வையும் கிடைக்கும்.  எதிர்த்து செய்தி போடும் ஊடகங்களின் மீதெல்லாம், அவதூறு வழக்கு போடும் ஜெயலலிதாவுக்கு, இது போன்ற பத்திரிக்கைகள் இனிக்கத்தானே செய்யும். 


இந்த விவகாரத்தில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறந்த நீதிபதிகளில் ஒருவரான ராமசுப்ரமணியத்திடம் வருகிறது.  அவருக்கு ஹாஜா மொய்தீன் கிஸ்தி யாரென்றும் தெரியும்.  ஏ.என்.ராதாகிருஷ்ணன் யாரென்றும் தெரியும்.  கர்ணன், தனபாலன், அருணா ஜெகதீசன், சி.டி.செல்வம் போல, அவ்வளவு எளிதாக, ராமசுப்ரமணியத்தை வளைத்து விட முடியாது என்பது ஏ.என்.ராதாகிருஷ்ணனுக்கும் நன்கு தெரியும். 

நீதியரசர் ராமசுப்ரமணியம்
இது போன்ற மருத்துவக் கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்து கிளை விடுவதற்கு காரணம், ஜெயலலிதா மற்றும் கருணாநிதிகள்தான்.   இவர்களே, இது போன்ற கல்விக் கொள்ளையர்களை தாலாட்டி, சீராட்டி வளர்க்கிறார்கள். இது போன்ற தரமற்ற கல்லூரிகளில் படித்து வெளி வரும் மருத்துவர்களிடம்தான், நாம் நமது பிள்ளைகளையும், பெற்றோர்களையும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப் போகிறோம். 

பேய்கள் அரசாண்டால், சாத்திரங்கள் பிணம்தானே திண்ணும் ? 

Monday, August 4, 2014

And the fight continues

Achimuthu Shankar, a key contributor to the Savukku website, has strongly protested the hacking of his e-mail by the National Cyber Safety and Security Standards. 

Following a series of exposes, Justice C T Selvam has ordered closure of all Savukku websites.

The time-line of the harassment of this whistleblower website we have already given here:  Savukku's relentless battle for justice.

http://tngopchennai.wordpress.com/2014/07/26/savukkus-relentless-battle-for-justice/

And look at the orders of  Mr Justice Selvam:  



Though previous Supreme Court rulings clearly lay down only the URL in question may be removed, if found objectionable, the Madras High Court arrogates to itself the right to crack down on any and every savukku-linked site. That is being challenged.

In the meantime as reported earlier Mr Pothi Kalimuthu who had rendered technical assistance has been arrested.  A Chennai magistrate has already turned down his bail plea and has granted police two days custody of the hapless Kalimuthu.  That also will be fought.

Meantime,  under the guise of acting under High Court instructions,   one Amar Prasad Reddy, Additional Director General of National Cyber Safety and Security Standards has hacked Shankar’s mail ID. This is unacceptable and illegal, Shankar has said in his letter to the Superintendent of Police with the Cyber Crime Investigation Cell Central Bureau of Investigation at New Delhi.

Inter alia, the letter notes, “The Cyber Crime Cell of Chennai City Police arrested one Pothy, S/o Kalimuthu, in connection with two cases.   During the arrest of the said Pothy, one Shri.Amar Prasad Reddy, Additional Director General, National Cyber Safety and Security Standards, Cyber House, Southern Region, No.1, 1st Floor, 1st Avenue, 8th Cross Street, Indira Nagar Main Road, Adyar, Chennai. 600 020 was present in the cyber crime division.               

Amar Prasad Reddy

During the course of investigation, the said Amar Prasad Reddy, even without the knowledge of cyber crime officials had hacked my email id :xxxxx@gmail.com, which I have been using for more than 3 years.   After gaining access to the email, the said Amar Prasad Reddy has changed the password and made the email inaccessible to me.    Further he had changed the recovery phone number, recovery email of the said email id.             

From the said email id, Amar Prasad Reddy had addressed various people and changed the passwords of a couple of other related sites also.    It is learnt that the said Amar Prasad Reddy has been threatening the cyber crime people that he is very close to Justice C.T.Selvam of Madras High Court and if the cyber crime people interfere with him, they would face severe action by Hon'ble Justice Mr.C.T.Selvam of the Madras High Court.              

The action of hacking of email and changing passwords by the said Amar Prasad Reddy, is a punishable offence under the Information Technology (Amendment) Act 2008.           

I request that a case may kindly be registered against Shri.Amar Prasad Reddy, Additional Director General, National Cyber Safety and Security Standards, Cyber House, Southern Region, No.1, 1st Floor, 1st Avenue, 8th Cross Street, Indira Nagar Main Road, Adyar, Chennai. 600 020 and investigation taken up in accordance with law. 

So the fight for justice continues, friends
  

Sunday, August 3, 2014

நீதியின் மரணம்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் வருகையில், இந்த நீதிபதிகள் பொங்குவதை பார்த்திருக்கிறீர்களா ?  இப்படிப்பட்ட குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.  சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படாவிட்டால் நாட்டில் இது போன்ற குற்றங்கள் பெருகி விடும்.  இப்படி வளைத்து வளைத்து கருத்து சொல்லுவார்கள் நீதிபதிகள். 


ஆனால்.....  அவர்கள் ஜாதியைச் சேர்ந்த, அதாவது ஒரு நீதித்துறை நடுவர் இதே தவரை செய்தால், இந்த நீதிபதிகள் கையாளும் அளவுகோலே வேறு.  
உமா மகேஸ்வரி.   காவல்துறையில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி திருமணம் செய்து, எல்லோரையும் போல வாழ வேண்டும் என்ற கனவோடு வாழ்வை தொடங்கிய பெண்.  

பயிற்சி எஸ்ஐ உமா மகேஸ்வரி
பயிற்சி காலத்திலேயே தங்கராஜ் என்ற வழக்கறிஞரோடு, பழக்கம் ஏற்படுகிறது.  பின்னாளில் அது காதலாக மாறுகிறது.   உமாவுக்கு கன்னியாக்குமரியில் பணி நியமனம் ஆகிறது.  தங்கராஜ், கன்னியாக்குமரிக்கே சென்று உமாவை பார்த்து வருவார்.  உமாவோ எப்படியும் தங்கராஜை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.  ஆனால், தங்கராஜுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதை உமா மிக தாமதமாகத்தான் உணர்கிறார்.

2012 ஜுன் 8ம் தேதி, "வா நாம் திருமணம் செய்து கொள்ளலாம்" என்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உமாவை அழைத்துச் செல்கிறார். அங்கு சென்றதும், நான் மேஜிஸ்ட்ரேட் வேலைக்கு தேர்வாகி விடுவேன். அதற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி, உமாவின் மனதை மாற்றி அழைத்து சென்று விடுகிறார்.  

இதற்கிடையே உமா தன் பெற்றோரிடம் தங்கராஜோடு உள்ள காதலை தெரிவிக்கிறார்.  பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

உமா மகேஸ்வரி 24 மனை தெலுங்கு செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். தங்கராஜோ அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். எப்படி ஒப்புக் கொள்வார்கள் ?  பெற்றோரின் எதிர்ப்பை தங்கராஜிடம் தெரிவிக்கிறார் உமா.  சரி வா திருமணம் செய்து கொள்ளலாம் என்று 22 ஜுன் 2012 அன்று பழனி முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார் தங்கராஜ். அங்கே சென்றதும், "நாம் ஏன் இப்படி அனாதையாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் ?  பெற்றோர் சம்மதத்துடனேயே திருமணம் செய்வோம்" என்று கூறி பஞ்சாமிர்தத்தை வாங்கி உமாவுக்கு கொடுத்து விட்டு பழனியிலிருந்தும் திரும்புகிறார்கள்.   எப்படியிருந்தாலும் நாம் திருமணம் செய்து கொள்ளத்தானே போகிறோம்.  இனி நாம் ஒன்றாகவே சேர்ந்து வாழ்வோம் என்று கூறி, அன்று முதல், உமா பணியாற்றும் கன்னியாக்குமரி இரணியல் காவல் குடியிருப்பில் இருவரும் ஒன்றாகவே வாழ்கிறார்கள்.

என்னால் அடிக்கடி ஈரோட்டிலிருந்து கன்னியாக்குமரி வர இயலாது. ஆகையால் நீ,  ஈரோடு மாவட்டத்துக்கு மாறுதல் வாங்கி வா என்று தங்கராஜ் கூறியதும், உமா முயற்சி செய்து திருப்பூர் மாவட்டத்துக்கு மாறுதல் வாங்கி வருகிறார். தங்கராஜின் பெற்றோர்களும் உமாவோடு நெருங்கிப் பழகுகின்றனர். 

11 அக்டோபர் 2012ல் மேஜிஸ்டிரேட்டாக தங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவியேற்கிறார்.  அதையொட்டி உமாவும், தங்கராஜின் பெற்றோரும் சென்னை செல்கின்றனர்.  பதவியேற்பு முடிந்ததும், எனக்கு குன்னூர் மேஜிஸ்ட்ரேட்டாக பணி நியமனம் கிடைத்துள்ளது.   சென்னையில் மூன்று மாதங்கள் பயிற்சி, பயிற்சி முடிந்து பதவியேற்றதும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார்.

மேஜிஸ்ட்ரேட் ஆனதும் தங்கராஜின் நடவடிக்கைகளில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன.   இத்தனை நாள் காதல் கசிந்துருக பேசிக்கொண்டிருந்த தங்கராஜ், ஏப்ரல் 2013ல் தன் சுயரூபத்தை உமாவிடம் வெளிப்படுத்துகிறார். "என் தம்பியை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும்.   அதற்கு 20 லட்ச ரூபாய் செலவாகும்.  எங்கள் வீட்டில் பார்க்கும் பெண்ணை நான் திருமணம் செய்தால், 100 பவுன் நகையும், 50 லட்ச ரூபாய் வரதட்சிணையும் அளிப்பார்கள்.  ஆகையால் இதையெல்லாம் நீயும் தந்தால்தான் என் வீட்டில் திருமணத்துக்கு சம்மதிப்பார்கள் என்று கூறுகிறார்.

உமாவுக்கோ பெருத்த அதிர்ச்சி.  சரி. ஏதோ கோபத்தில் பேசுகிறார். பின்னர் பேசி சரி செய்து கொள்ளலாம் என்று விட்டு விடுகிறார்.  இந்த நிலையில், உமா பணிக்கு சென்றிருந்தபோது, 14 ஏப்ரல் 2013 அன்று வீட்டுக்கு சென்ற தங்கராஜ், உமா, தங்கராஜ் இருவரும் பரிமாறிக் கொண்ட பரிசுப் பொருட்கள், உமாவின் டைரி, இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என்று உமாவும், தங்கராஜும் காதலித்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் ஓசையின்றி எடுத்துச் சென்று விடுகிறார்.

இதற்குப் பிறகு, உமாவின் தொலைபேசி அழைப்புகளை தங்கராஜ் எடுப்பதில்லை.   போதாத குறைக்கு, அவரது நண்பர் வழக்கறிஞர் பிரகாஷை விட்டு, உமாவை தொலைபேசியில் மிரட்டுகிறார். "என் நண்பனை விட்டு விடு.   தொல்லை கொடுத்தாயென்றால், உன்னை லாரி ஏற்றி கொன்று விட்டு ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு சென்று விடுவோம்" என்று மிரட்டுகிறார்.  ஆனால், எப்படியும் தங்கராஜ் தன்னை கை விட மாட்டார் என்ற நம்பிக்கையில் உமா தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறார். 

இதற்கிடையே தங்கராஜின் பிறந்தநாளுக்காக, ஒரு புதிய மொபைல் போனை வாங்கி ஒரு பையனிடம் அளித்து, குன்னூரில் தங்கராஜிடம் கொடுத்து விடுமாறு அனுப்பி வைக்கிறார் உமா.  போனை கொடுக்கச் சென்ற அந்த பையன் திரும்பி வரவில்லை. தகவலும் இல்லை.  பயந்து போன உமா, உடனடியாக குன்னூர் கிளம்பிச் செல்கிறார்.   அங்கே சென்று தங்கராஜை சந்தித்ததும், உன்னை நான் தொடர்பு கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியும், ஏன் என்னை பின்தொடர்ந்து வந்து தொல்லை செய்கிறாய் என்று கூறி, உமாவை அடிக்கிறார்.    சிறிது நேரத்தில், தங்கராஜின் நண்பர் பிரகாஷ் என்ற வழக்கறிஞரும் வருகிறார். அவர் வந்ததும் மீண்டும் அடிக்கிறார் தங்கராஜ். 

இதற்குப் பிறகு, தங்கராஜ், உமாவின் உயரதிகாரியான டிஎஸ்பியிடம் புகார் அளிக்கிறார். உமா என்னை போனில் தொடர்ந்து தொல்லை தருகிறார்.  நான் மேஜிஸ்டிரேட்டாக இருக்கிறேன்.  என்னால் என் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை என்று புகார் அளிக்கிறார்.   அவர்கள் நடந்த விஷயத்தை விசாரித்த பிறகு, மூன்று மாதங்களுக்குள் தங்கராஜ் உமாவை திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், தங்கராஜை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உமாவுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர்.  

இந்த நிலையில் உமாவுக்கு குன்னூரிலிருந்து போன் வருகிறது. தங்கராஜுக்கு திருமணம் நடக்கப் போவதாக தகவல் வருகிறது. உடனடியாக ஊட்டிக்கு கிளம்பிச் சென்ற உமா, மாவட்ட நீதிபதியை சந்தித்து புகார் அளிக்கிறார்.  மாவட்ட நீதிபதி, தங்கராஜை நேரில் சென்று சந்திக்கச் சொல்கிறார்.   தங்கராஜ் உமா வந்திருப்பது அறிந்ததும், ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு போன் செய்து, ஒரு பெண் நீதிமன்றத்தில் வந்து கலாட்டா செய்வதாக கூறுகிறார்.    உடனடியாக காவல்துறையினர் அந்த இடத்துக்கு வந்து உமாவை விசாரிக்கிறார்கள். உமாவும் உதவி ஆய்வாளர் என்று அறிந்ததும் என்ன செய்வது என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருப்பதற்குள், தங்கராஜ் நீதிமன்றத்தை விட்டு தப்பிச் செல்கிறார்.

இனியும் தாமதித்தால் கதை நடக்காது என்பதை உணர்ந்த உமா, உடனடியாக ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்கராஜ் மீது ஒரு புகார் அளிக்கிறார்.  23 ஜுன் 2013 அன்று நடக்க இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு புகார் அளிக்கிறார்.





எஸ்.பி, டிஐஜி மற்றும் ஐஜியிடமும் தங்கராஜ் மீது புகார் அளிக்கிறார். 
20 ஜுன் 2013 அன்றே தங்கராஜுக்கு திருமணம் நடந்து முடிந்து விட்ட விபரம் உமாவுக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைகிறார்.   தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர்நீதிமன்றப் பதிவாளர், தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் அனுப்புகிறார்.  புகார் ஃபேக்ஸ் மற்றும் பதிவுத் தபாலில் அனுப்பப்படுகிறது.

24 ஜுன் அன்று சென்னை வந்த உமா, அப்போதைய தலைமை நீதிபதி அகர்வால், ஊட்டிக்கு பொறுப்பான நீதிபதி எலிப்பி தர்மாராவ் மற்றும் பதிவாளர் ஆகியோரை சந்தித்து நேரில் புகார் அளிக்கிறார்.  அவர்கள் மூவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில்தான், 29 ஜுன் 2013 அன்று உமாவின் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர், தங்கராஜை கைது செய்தனர். 


மறுநாளே தங்கராஜ் ஜாமீனில் விடப்பட்டார்.  சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்தது.

Blatant misuse of powers and showing scant regard and disrespect to the guidelines issued by the Supreme Court, have compelled us to take a suo motu action for contempt by five police officers and three constables," the first bench comprising acting Chief Justice R K Agrawal and Justice M Sathyanarayanan said. 

"By this action, they (police) had lowered the authority of the court in the eye of the general public, which prima facie amounts to contempt of court,"

பொதுமக்களின் பார்வையில் நீதிமன்றத்தின் மாண்பு குறைந்து விட்டது என்று, தலைமை நீதிபதி அகர்வால் தலைமையிலான அமர்வு, மாவட்ட கண்காணிப்பாளர் பொன்னி, உடுமலைப்பேட்டை டிஎஸ்பி பிச்சை, பல்லடம் டிஎஸ்பி சுரேஷ்குமார், உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆய்வாளர் சாந்தமூர்த்தி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றமும், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தற்போது, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.

உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பும் எஸ்.பி பொன்னி மற்றும் காவல்துறை அதிகாரிகள்

குற்றவாளியான தங்கராஜை, உயர்நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே உள்ள தீர்ப்புத் திரட்டு என்ற பிரிவில் நியமித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.  அவர் நிம்மதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.  

உமா மகேஸ்வரியின் தந்தை, சாலையில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்று வாழ்வை நடத்துபவர்.   அவர் தாயார் வேலைக்கு செல்வதில்லை. இப்படியொரு வறுமையான சூழலில் படித்து, உதவி ஆய்வாளர் வேலையில் சேர்ந்துள்ளார் அவர்.   உமாவுக்கு நேர்ந்த இந்த அவலம், சமூகத்தில் எந்த பெண்ணுக்கு வேண்டுமானாலும் நேரலாம்.    இது போன்ற உமாக்களை ஏமாற்றும் கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சட்டமும் நீதிமன்றங்களும் இருக்கின்றன.

ஆனால், சட்டப்படி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக, ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், இன்று நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.   இவர்கள் செய்த குற்றம், நீதிபதியை கைது செய்வதில் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகள் மீறப்பட்டுள்ளதாம்.  

எந்த ஒரு நபரையும் கைது செய்கையில் என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் டி.கே. பாசு என்ற வழக்கில் விரிவாக தீர்ப்பளித்துள்ளது. இந்தக் கட்டளைகள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பலகையாக வைக்கப்பட வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு மீறப்பட்டால், உச்சநீதிமன்றம் வரவேண்டியதில்லை. அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களிலேயே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கலாம் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

எந்த காவல் நிலையத்திலாவது இப்படியொரு பலகையை பார்த்திருக்கிறீர்களா ?  இந்த தீர்ப்பை இந்தியாவில் எந்த காவல்துறையும் பின்பற்றுவதில்லை.  தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு கைதுகளின்போதும், டி.கே பாசு வழக்கில் வழங்கப்பட்டுள்ள கட்டளைகள் மீறப்பட்டுக் கொண்டுதான் உள்ளன. 

இதற்கெல்லாம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்துள்ளனரா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ?    நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்த இதே தலைமை நீதிபதி அகர்வாலை சந்தித்துத்தானே பாதிக்கப்பட்ட உமா மகேஸ்வரி புகார் அளித்தார் ?   
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால்
உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, தங்கராஜை பணி இடைநீக்கம் செய்திருந்தால் காவல்துறை ஏன் வழக்கு பதிவு செய்திருக்கப் போகிறது ? நீதிபதிகள் என்றால் அவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாதா ?  

தங்கராஜ் போன்ற அயோக்கியன் இருக்க வேண்டிய இடம் சிறை அல்லவா ?  அந்த தங்கராஜை பாராட்டி, சீராட்டி, தங்கள் பாதுகாப்பிலேயே பணியாற்ற வைத்து விட்டு, நியாயமாக சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அலைக்கழிப்பதற்கு, இந்த நீதிபதிள் வெட்கப்பட வேண்டும். காவல்துறையின் நடவடிக்கையால், பொதுமக்கள் மத்தியில் நீதித்துறையின் மாண்பு குறையவில்லை.  ஒரு அயோக்கியனை காப்பாற்ற தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளால்தான், நீதித்துறையின் மரியாதை, மாண்பு பொதுமக்களிடையே காற்றில் பறக்கிறது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும், நீதிபதிகள் பால் வசந்தகுமார் மற்றும் சத்யநாராயணா ஆகியோர் நல்ல நீதிபதிகள்.   அவர்கள் வீட்டில் உள்ள ஒரு பெண்ணை,  தங்கராஜ் போன்ற அயோக்கியன் ஒருவன் இப்படி ஏமாற்றியிருந்தால் அவர்கள் அந்த அயோக்கியனை சிறையில் அடைக்க சொல்வார்களா ?  அல்லது, வேலை கொடுத்து காப்பாற்றுவார்களா ? 

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கால் நடந்த மற்றொரு அநியாயம் என்ன தெரியுமா ?  தங்கராஜ் கைது நடந்து இரண்டு மாதங்களுக்குள், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியாக இருந்தவர் நாகநாதன்.   இவரது வீட்டுக்கு பாதுகாப்புக்காக, ஆயுதப்படையை சேர்ந்த ஒரு பெண் காவலர் நியமிக்கப்பட்டிருந்தார்.  இரவு 10.30 மணிக்கு, நன்றாக குடித்து விட்டு, அந்த பெண் காவலரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயன்றிருக்கிறார் நாகநாதன்.   அந்த பெண் காவலரை நகத்தால் கீறி, பிராண்டி, அவர் உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

தங்கராஜ் கைது சம்பவத்தால், அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.  மாறாக, நாகநாதன் பணி இடைநீக்கம் மட்டும் செய்யப்பட்டார்.    இணைப்பு  

தங்கராஜ் கைது தொடர்பாக நடந்து வரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கால், உமா மகேஸ்வரியின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலன் விசாரணை, அப்படியே தேங்கி நிற்கிறது. 

தங்கள் துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அநீதிக்கே நியாயம் வழங்க முடியாத கையறு நிலையில் நிற்கிறது காவல்துறை. எழுத்துபூர்வமாக மன்னிப்பு எழுதிக் கொடுத்தால் வழக்கை முடிக்கிறோம் என்று மிரட்டுகின்றனர் நீதிபதிகள்.  


ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று நம்பவைத்து, இரண்டு வருடம் அவளோடு குடும்பம் நடத்தி, அவள் பெற்ற மாத ஊதியத்தையெல்லாம் வாங்கி செலவு செய்து, மேஜிஸ்ட்ரேட் ஆகி விட்ட ஆணவத்தில், அந்த அப்பாவிப் பெண்ணை தெருவில் விட்டு விட்டு, நீதித்துறை தரும் பாதுகாப்பில் திமிரோடு அலைகிறான் ஒருவன்.   அந்தப் பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளோ, அந்தக் கயவனை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார்கள்.   இதில், தங்கராஜ் தலித், அதனால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று வேறு ஒரு குழு கிளம்பியிருக்கிறது.   தலித்  உயர்சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றினால், அது குற்றமாகாதா ?

இதுதான் நீதிபதிகள் நீதி பரிபாலனம் செய்யும் லட்சணம்.   பாரபட்சமான உங்கள் நீதி பரிபாலனத்தைப் பார்த்து ஊரே கை கொட்டி சிரிக்கிறது நீதிபதிகளே.  ஒரு அபலைப் பெண்ணுக்கு நியாயம் வழங்காமல், அவளை ஏமாற்றிய அயோக்கியனை பாதுகாக்கும் உங்கள் நீதித்துறையின் லட்சணம் கடும் கண்டனத்துக்கு உரியது.  

இனியாவது தாமதம் செய்யாமல், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் பால் வசந்தகுமார் மற்றும் சத்யநாராயணா ஆகியோர் உடனடியாக கை விடுவார்கள் என்று நம்புகிறோம்.

நாளை வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பெறாதீர்கள் நீதிபதிகளே.....   இந்த அபலைப் பெண்ணுக்கு நீங்கள் வழங்கும் நீதி இதுதானா ?