தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருக்கிறதா ? இது இப்போது நடக்கவில்லை. 2020ல் நடக்கிறது. கருணாநிதியின் 97வது பிறந்த நாள் முடிந்தவுடன் இந்த அறிவிப்பு வெளிவரும் என்று சவுக்குக் பிரத்யேக தகவல் வந்துள்ளது. கருணாநிதியின் 97வது பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதைப் பற்றி பார்க்கும் முன், 2020 எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விடுவோம்.
2011 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறுகிறது. கருணாநிதி மீண்டும் முதல்வராகிறார். 2020ல் தேர்தல் சமயத்தில் மக்களுக்கு கொடுக்கப் படும் பணத்தில் நிறைய ஊழல் ஏற்படுவதாக புகார் வந்ததையடுத்து, ரேஷன் கடைகளிலேயே ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் பணம் பட்டுவாடா செய்யப் படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிடுகிறது.
இலவச கலர் டிவி, இலவச வீட்டு மனை போல, அனைவருக்கும் வருடத்திற்கு ஒரு முறை, இலவச பேண்ட் சர்ட், இலவச உள்ளாடைகள் வழங்கப் படுகின்றன.
அனைத்து காவல் நிலையங்களிலும், எஃப்ஐஆர் போட, அரெஸ்ட் பண்ண, அரெஸ்ட் பண்ணாமல் இருக்க, காணாமல் போன பொருளை கைப்பற்ற, கைப்பற்றிய பொருளை திருப்பித் தர, புகார் கொடுக்கும் போது, உட்கார வைக்க, கெட்ட வார்த்தையில் திட்டாமல் இருக்க என்று தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப் பட்டு, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
என்கவுண்டரில் ஈடுபடும் போலீசாருக்கு, மேற்படி வசூலாகும் தொகையிலிருந்து 10 சதவிகிதம் வெகுமதியாக கிடைக்கும் என்று அறிவிக்கப் படுகிறது.
டாஸ்மாக் கடைகளில் போதுமான சரக்கு கிடைப்பதில்லை என்று வந்த புகாரையடுத்து, அனைத்து மளிகை கடைகளிலும் மதுபானங்கள் விற்கலாம் என்று உத்தரவிடப் படுகிறது.
தமிழகத்தில் வரும் அனைத்து செய்தித் தாள்களிலும், முதல் பக்கத்தில் கருணாநிதியின் படம் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப் படுகிறது. தவறும் நாளிதழ்களுக்கு, அரசு விளம்பரம் நிறுத்தப் படுகிறது.
தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி கிடையாது என்று உத்தரவிடப்பட்டது போதாது என்று திரையுலகத்தினர் வைத்த கோரிக்கைகளை அடுத்து, ஒவ்வொரு திரைப்படம் எடுக்கும் போது ஆகும் செலவில் 50 சதவிகிதத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப் படுகிறது.
திரைப்படத்தில் வாய்ப்பு குறைந்த நடிக நடிகையருக்கு, அரசு வேலை என்று அறிவிக்கப் படுகிறது.
2020ல் ஏற்பட்ட ராஜ்ய சபை காலியிடத்தில் தன் மகனுக்கு இடம் வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து, கருணாநிதி 2024ல் ஏற்படும் காலியிடத்தில் வழங்கப் படும் என்று உறுதி கூறுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி கலைக்கப் பட்டு திமுகவோடு இணைக்கப் பட்டு, மருத்துவர் ராமதாசுக்கு, திமுக வன்னியர் பிரிவு தலைவர் என்று பதவி வழங்கப் படுகிறது.
அதே போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கலைக்கப் பட்டு, திமுகவின் தலித் பிரிவு தலைவராக திருமாவளவனுக்கு பதவி வழங்கப் படுகிறது.
கருணாநிதியின் “கவர் பாலிடிக்ஸ்“ முன் அரசியல் செய்ய முடியாமல் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் அழிந்து போகின்றன.
எதிர்க்கட்சியே இல்லாமல் இருந்தால், இமேஜ் நன்றாக இருக்காது என்று கருணாநிதியே, “திராவிட பின்னேற்றக் கழகம்“ என்ற ஒன்றை துவக்கி, அதற்கு, அழகிரியை தலைவராக்குகிறார்.
இப்போது டிஜிபியாக உள்ள லத்திகா சரண், ஓய்வு பெற்றதும், திமுக மகளிர் அணித் தலைவியாக ஆகிறார்.
உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், ஓய்வு பெற்றதும், எம்எல்ஏவாகி, மந்திரியும் ஆகி, “ஒட்டுக் கேட்புத் துறை“ மந்திரியாக்கப் படுகிறார்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், நாயுடு மகாஜன சபாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
மவுரியா சிஐடி காலனி வீட்டின் “மெயின்டெனன்ஸ்“ காண்ட்ராக்டர் ஆகிறார்.
லஞ்ச ஒழிப்புத் துறை மூடப்பட்டு, “லஞ்ச பராமரிப்புத் துறை“ என்ற ஒன்று ஏற்படுத்தப் பட்டு, ஆ.ராசா அதற்கு மந்திரியாகிறார்.
ஏ.கே.விஸ்வநாதன், அப்போதும் பதவியில்லாமல், அழகிரி வீட்டில் வாட்ச்மேனாக சேர்ந்து விடுகிறார்.
வழக்கறிஞர்-காவல்துறை மோதல் குறித்த தீர்ப்பு 2024ல் வழங்கப் படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கிறது.
அரசு ஊழியர்கள் வாரத்துக்கு ஒரு முறை அலுவலகம் சென்றால் போதும், சம்பளம் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் படுகிறது.
பழைய உள்துறை செயலாளர் மாலதி, அஞ்சுகம் அறக்கட்டளையின் கணக்காளர் ஆகிறார்.
காங்கிரஸ் கட்சி, 2028ல் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று அறிவிக்கிறது.
இப்போது கருணாநிதியின் பேச்சு.
இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த “கலைஞர் பாராட்டு விழாத் துறை“ அமைச்சர் தம்பி துரை முருகன் அவர்களே, துணை முதலமைச்சர் குஷ்பூ அவர்களே, ஒட்டுக் கேட்புத் துறை அமைச்சர் ஜாபர் சேட் அவர்களே, நாயுடு மகாஜன சபா தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களே, மகளிர் அணித் தலைவர் லத்திக்கா சரண் அவர்களே, பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களே, இந்த விழாவை அழகாக தொகுத்து வழங்கிய, கழக முன்னோடி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே…
எனக்கு பாராட்டு விழா என்றாலே பிடிக்காது. அந்த நேரத்திலே, எப்படி மக்கள் பணி ஆற்றலாம், என்ன எழுதலாம் என்று சிந்தித்து வேலை செய்பவன் நான்.
ஆனால் துணை முதலமைச்சர் குஷ்பூ அவர்கள் இது பாராட்டு விழா அல்ல, பிறந்த நாள் விழா என்று எடுத்துக் கூறி, என்னை இசைய வைத்தார்கள். கழக ஆட்சியிலே துணை முதல்வராக இருந்தாலும், அவருக்கு நன்றி பாராட்டுதல் தமிழ்ப் பண்பு என்பதால் நன்றி கூறுகிறேன்.
இந்த விழாவுக்கு வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள், என்னிடமிருந்து ஏதாவது செய்தியை எதிர்ப்பார்த்திருப்பீர்கள். எப்போது இவன் ஓய்வு பெறுவான், எப்போது இளைஞர் அணித் தலைவர் (?!) ஸ்டாலின் அரியணை ஏறுவார் என்று காத்திருக்கிறீர்கள்.
எனக்கு வயதாகி நான் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்தால் தானே ஸ்டாலின் முதல்வராக முடியும். நானே ஒரு இளைஞன். இதனால்தான், நான் 2010ம் ஆண்டு, இளைஞன் என்ற ஒரு படத்துக்கு வசனம் எழுதினேன்.
அந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று அருமைத் தம்பி வைரமுத்து எவ்வளவோ முயற்சி செய்தும், சில சதிகாரர்களால், ஒரு தமிழன், தமிழில் வசனம் எழுதியதற்காக ஆஸ்கர் விருது மறுக்கப் பட்டது.
இவ்வாறு ஆஸ்கர் விருது மறுக்கப் பட்ட போது, அஞ்சாநெஞ்சன் அழகிரி, உடனடியாக ஹாலிவுட் சென்று, ஒரு பத்து பேரையாவது உயிரோடு கொளுத்தலாம் என்றான். நான்தான், பெருந்தன்மையோடு வேண்டாம் என்றேன்.
இந்த வயதிலும், ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து (பன்ச்) நான் வேலை பார்த்து வருகிறேன். தமிழ்நாட்டிலே ஒரு காலத்தில், ஜெயலலிதா என்ற ஒரு அம்மையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவர் பல கோப்புகளை கட்டி வைத்திருந்தார். நான்தான் அவர் கட்டி வைத்திருந்த கோப்புகளையெல்லாம், 2006ல் கழக ஆட்சி வந்தவுடன், அவிழ்த்து, உடனடியாக நடவடிக்கை எடுத்தேன்.
இப்போதும் சிலர், எப்படி எனக்கு இந்த வயதிலும் இப்படி சலிக்காமல் வேலை செய்யும் தெம்ப இருக்கிறது என்று கேட்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக, தொடர்ந்து “மானாட மயிலாட“ நிகழ்ச்சியைப் பார்த்துதான் எனக்கு பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தையும், உணர்ச்சியையும் ஊட்டிக் கொள்கிறேன்.
இது போல, நீங்களும், தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பீர்களேயானால், என்னைப் போலவே ஓய்வு ஒழிச்சலின்றி பணியாற்றும், தெம்பு வரும் என்பதை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஸ்டாலின் அவர்களுக்கு முதல்வர் பதவி, உரிய நேரத்தில் வழங்கப் படும். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் தலைமை நிலையக் குழு, செயற்குழு, பொதுக்குழு ஆகியவை கூடி முடிவு செய்யும்.
என்று பேசினார்.
விழா முடிந்ததும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஸ்டாலின், 1975ம் ஆண்டு முதல், தனக்கு பதவி தருகிறேன், தருகிறேன் என்று தொடர்ந் சொல்லி வந்த கருணாநிதி, இந்த பிறந்த நாளிலாவது பதவியைத் தருவார் என்று எதிர்ப்பார்த்தேன், ஆனால், தலைவர் அவர்கள், நான் இன்னும் இளைஞன் என்று கூறி விட்டதால், எனக்கு வாய்ப்பு எப்போதுமே வராதோ என்று தோன்றுகிறது.
இதனால், நான் பொது வாழ்வில் இருந்தும், அரசியலில் இருந்தும் ஓய்வு பெறலாம் என்று முடிவு செய்து விட்டேன் என்று ஸ்டாலின் அறிவித்தார்.
சவுக்கு
This is not a Joke might become reality, who knows?
ReplyDeleteதமாசு ..தமாசு ...
ReplyDeleteSir, ஒரு கேள்வி உங்களுக்கு .....!!
2020லுமா தமிழக மக்கள் திருந்தாம இருக்காங்க ?
excellent satire...great going...but I wouldn't be surprised if this happens. Though I am not a fan of scionship in democratic politics...I personally feel Stalin deserves the ascent purely on merits..I don't think anyone else in DMK is capable of taking the mantle..of course there was one but he was booted out in '93 :-)
ReplyDeleteChennaivaasi
சிரித்து கண்களில் தண்ணீர் வந்து புரையேறி......... அடேங்கப்பா என்னவொரு கற்பனை.
ReplyDeleteஆனால் இது உண்மையாகிவிடும் போலத்தான் இருக்கிறது.
திரைப்படத்தில் வாய்ப்பு குறைந்த நடிக நடிகையருக்கு, அரசு வேலை என்று அறிவிக்கப் படுகிறது.
ReplyDelete/////////
சிறப்பாக ஏற்பாடு செய்த “கலைஞர் பாராட்டு விழாத் துறை“ அமைச்சர் தம்பி துரை முருகன் அவர்களே, துணை முதலமைச்சர் குஷ்பூ அவர்களே
////////////
இப்பவே.......கண்ன கட்டுதே...
:)
ReplyDeleteNo information about DMDK and Vijayakanth?????:)
ReplyDeleteஇப்போதே கூட்டணி கட்சி என்றால் ஆளும் கட்சியின் ஒரு பிரிவு என்பது போல்தான் இருக்கிறது, அவர்களும் அப்படிதான் எதிர் பார்க்கிறார்கள். இந்த இரு கழகங்களுக்கும் இந்த ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருக்கிறது. நிற்க, நிலைமை இப்படியே போனால் நிச்சயமாக இது போல்தான் நடக்கும். தங்களுக்கும் தீர்கதரிசி என்ற பட்டம் கிடைக்கும். (இதில் உள்குத்து ஏதும் இல்லை). அந்த நேரத்தில் இதுதான் உண்மையான ஜனநாயகம் என்றும் சொல்வார்கள். வாழ்க இந்திய ஜனநாயகம்.
ReplyDeleteவணக்கம் அன்பு நண்பர் யூர்கன் அவர்களே. பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மக்களைப் பார்த்ததும், 2020ல் அல்ல 2050ல் கூட இது மாறாது என்றே தோன்றுகிறது. தாராளமய பொருளாதாரத்தின் கிளைப் பயன்கள் இதெல்லாம்.
ReplyDeleteநன்றி சென்னை வாசி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
ReplyDeleteஉங்கள் பாராட்டுரை என்னை மேலும் ஊக்கப் படுத்துகிறது ஜோதிஜி. நன்றிகள் கோடி.
நன்றி தோழர் உலவு.
தொடர்ந்து பின்னூட்டம் இட்டு ஆதரவு தரும் அன்பு நண்பர் ஆனந்த் அவர்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteபின்னூட்டம் இடாவிட்டாலும் தங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்துதான் வருகிறேன்.
ReplyDeletehahahahahhahahahha
ReplyDelete:)
ReplyDeleteஇதுல சிரிக்க வேண்டியது ஒன்னும் இல்ல .நடக்கப்போறது இது தான் அப்பிடின்னு நெனசுப்பாருங்க எப்பிடி சிரிப்பு வரும்.
ReplyDeleteninaitthuppaarthaale nadukkamaai ulladhu. Paavam yengal perappillaigal. naan ticket vaangividuven. idhaipparkkaamalaye.
ReplyDeleteசவுக்கு டிவி என்று ஒரு சேனல் ஆரம்பிக்கப்பட்டு அதில் உங்கள் எண்ணங்களை உருவகபடுத்தினால் 2020 இல்லை 2012 இலேயே குடும்ப கட்சிகள் தமிழகத்தில் இருந்து கூடாரத்தை காலி செய்ய வேண்டி வரும், உங்கள் கலாய்த்தல்கள் எல்லாம் ரொம்ப நேர்த்தியாகவும் இயல்பாகவும் உள்ளது. உங்கள் எண்ணங்களை இணையதளத்துடன் நிறுத்திடாதீங்க சின்னத்திரையில் நீங்களும் வண்ண கோலங்கள் கொண்டு வாங்க..
ReplyDelete