Monday, April 26, 2010

கமிஷனர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு.


சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் எழுந்துள்ளது. நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில், திமுகவினர் வந்து அமைதியான முறையில், அங்கே கருப்புக் கொடி காட்டிய வழக்கறிஞர்களை தாக்கிக் கொண்டிருந்த போது அதைத் தடுத்ததாகவும், அந்த தாக்குதலை படம் பிடிக்க முயன்றதாகவும் திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது.

மேலும், படமெடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை திமுகவினர் அமைதியாக தாக்கிக் கொண்டிருந்த போது அதைத் தடுக்க முயன்றதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால், திமுக நிர்வாகி வி.எஸ்.பாபு அளித்த புகாரின் பேரில், ரவுடிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, ரவுடிகள் மீது வன்முறையை பிரயோகித்தது, ரவுடிகளின் பணிகளில் இடையூறு செய்தது, ரவுடிகளுக்கு பாதுகாப்புத் தர மறுத்தது, என்ற பிரிவுகளின் கீழ் கமிஷனர் ராஜேந்திரன் மீது புகார் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

திமுகவினர் கமிஷனர் மீது இவ்வாறு புகார் தரக் காரணம், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் போது, பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்டதைக் கண்ட ராஜேந்திரன், அவர்களை பாதுகாக்க முயற்சித்ததைக் கண்ட, திமுகவினர் கடும் கோபம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து பேட்டியளித்த வி.எஸ்.பாபு, தலைவர் ஆட்சி நடக்கையிலேயே, இவ்வாறு காவல்துறையினருக்கு கழக கண்மணிகளை தடுக்க துணிவிருக்கிறதென்றால் இது மிக ஒரு மோசமான சம்பவம். இதனால்தான் ராஜேந்திரன் மீது புகார் கொடுத்திருக்கிறோம். இந்த விழாவிலே பங்கேற்ற டிஜிபி லத்திக்கா சரண் முன்னிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதனால், லத்திக்கா சரண் மீதும் புகார் கொடுக்கலாமா என்று யோசித்து வருகிறோம் என்று கூறினார். பிறகு சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதோடு முடித்துக் கொண்டார்.


கமிஷனர் ராஜேந்திரன் வட்டாரங்களிடம் பேசிய போது, விழாவிற்கு வந்திருந்தவர்கள், திமுகவினர் என்று தெரியாமல் அவர்களைத் தடுக்க முற்பட்டதாகவும், தெரிந்திருந்தால், தன்னுடைய காரிலேயே அவர்களை அனுப்பி வைத்திருப்பேன் என்றும், இப்போது கூட, தன்னுடைய கமிஷனர் பதவிக்கு ஆபத்து எதுவும் வந்து விடாமல் இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாகவும், வி.எஸ்.பாபு விரும்பினால், நேரில் வந்து அவரிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாவும் கூறப்பட்டது.

இப்படியும் நடக்கலாம் !!!! ????? இதெல்லாம் திமுக ஆட்சிலே நடக்காதுன்னு நெனைக்காதீங்க. சீக்கிரம் நடக்கும்

சவுக்கு


1 comment:

  1. அதுவும் நடக்கும், அதற்கு மேலும். நடந்துகொண்டுதானே இருக்கிறது. சம்பவங்களுக்குப் பிறகோ சட்டமன்றத்திலோ அவர்கள் பேசிய கருத்துக்களில் ஒரு துளி வருத்தமில்லையே. காவலர்களும், அதிகாரிகளும், அடிவருடிகளும் புடைசூழ, இதற்கும் மேல் பார்த்தவன் நான் என்று முண்டா தட்டுகிறார் முதல்வர். எங்கள் தலைவருக்கெதிராக கோஷமெழுப்பினால் சும்மா இருக்கமுடியுமா என்று சீறுகிறார் சட்ட அமைச்சர். அ இ அதிமுகவோ, திமுகவோ, யார் ஆண்டாலும் சாத்திரங்கள் பட்டினி கிடக்கவேண்டாம், பிணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

    ReplyDelete