Wednesday, June 23, 2010

”தண்டவாள தகர்ப்புக்கு காரணம் நானா?” மறுக்கிறார் மாறன்






இந்திய நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பவர் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவர் சமீபத்தில் இந்திய அரசின் கவுரவ விருந்தினராக இந்தியாவுக்கு வந்து சென்றிருக்கிறார்.

அவருக்கு இந்திய அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை ராஜ மரியாதையோடு எப்படி இந்தியாவுக்கு வரவழைக்கலாம் என்கிற கேள்வி பரபரப்பாக எழுந்து அடங்கி இருக்கிறது.



இப்படி இந்தியாவுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவிலேயே சிறை பிடிக்க வேண்டும் என்று சொல்லி, சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அவர் எந்தவித இடையூறும் இல்லாமல் இலங்கைக்கு பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.



இது ஒருபுறமிருக்க, தமிழர் விடுதலைப் படை என்கிற இயக்கத்தை நடத்தி பரபரப்பாகப் பேசப்பட்ட பிரமுகர்களான மாஸ்டர் பிரைன் மாறனும் ரேடியோ வெங்கடேசனும் தங்களுடைய கடந்த கால செயல்பாடுகளுக்காக போலீஸாரிடம் சிக்கி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, மொத்த சமூகத்திலிருந்தும் தற்போது தங்களுடைய சொந்த கிராமங்களில் ஒதுங்கி பிரச்னையில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை திடுமென வெடிகுண்டு வழக்கில் நுழைக்க போலீஸார் படாதபாடுபட்டுக் கொண்டிருக்க, அவர்கள் சார்ந்திருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உறவுக்காரர்களும் திடுக்கிட்டுப் போயிருக்கிறார்கள்.



கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் சொந்த கிராமம் ஒன்றில் செங்கல் சூளை அமைத்துக் கொண்டு தானுண்டு தன் பணியுண்டு என்று இருக்கும் மாறனும் அவருடைய இயக்கத்தைச் சேர்ந்தவருமான ரேடியோ வெங்கடேசனும்தான் சமீபத்தில் விழுப்புரம் அருகில் நடந்த ரயில் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று சொல்லி, மொத்த பழியையும் தூக்கி அவர்கள் தலையில் திணிக்க முயன்று கொண்டிருக்கிறது போலீஸ். அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள், கில்லாடியான தமிழகப் போலீஸார்.


காவல்துறையினரால் ‘தலைறைவாகி இருக்கிறார்கள்‘ என்று சொல்லப்படும் மாறனை எந்தவித சிக்கலும் சங்கடங்களும் இல்லாமல் நாம் தினமதி நாளிதழுக்காக சந்தித்தோம். அப்போது அவர் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து-

”சமீபத்தில் விழுப்புரத்திற்கு அருகில் ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக ரயில் பயணிகள் தப்பினார்கள். அந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் தமிழ்த் தீவிரவாதிகள் உள்ளனர் என்று போலீஸார் தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, இந்த குண்டு வெடிப்பில் உங்களுக்கும் உங்களோடு சிறையில் இருந்த ரேடியோ வெங்கடேசனுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் போலீஸார் கூறுகிறார்கள்.

இது குறித்து உங்கள் கருத்து என்ன?”

”என் மீது போடப்பட்ட வழக்கு ஒன்றிற்காக பத்தாண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து விட்டு கடந்த ஜனவரி 19-ம் தேதி நான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். அந்த வழக்கு தவிர, என் மீது வேறு சில வழக்குகளும் உள்ளன. அந்த வழக்குகள் பூந்தமல்லி, சிதம்பரம், சத்தியமங்கலம், கோவை மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் ஆகிய நீதிமன்றங்களில் இருக்கின்றன.





அங்கெல்லாம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்குகளுக்காக வாரம் இருமுறை நான் நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் மீது அசைக்க முடியாத நல் எண்ணம் இருப்பதாலேயே தொடர்ந்து விசாரணைக்குச் சென்று வருகிறேன். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை.

இது என் மீது வழக்கு மேல் வழக்குப் போட்டு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் தமிழக போலீஸுக்கு மிக நன்றாகத் தெரியும். இருந்தும், என்ன காரணம் என்று புரியவில்லை... விழுப்புரம் ரயில் தண்டவாளத்தில் வெடிக்கப்பட்ட வெடிகுண்டு சம்பவத்துக்கு நான் காரணம் என்பது போல செய்தியை பரப்பி, நான் தலைமறைவாகி விட்டதாகவும் செய்தி பரப்புகிறது தமிழக போலீஸ். இதெல்லாம் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

என்னைப் போலவேதான் ரேடியோ வெங்கடேசனும் அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளுக்காக தொடர்ந்து நீதிமன்றங்களுக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், துளியும் ஆதாரமற்ற செய்திகளை போலீஸ் எப்படி வெளியிட்டு வருகின்றது என்பது எனக்குப் புரியவில்லை. எல்லாமே எனக்குப் புதிராகத்தான் உள்ளது.

மொத்தத்தில், ஏதோ ஒரு சதி வலை எங்களை நோக்கிப் பின்னப்படுகின்றன என்பதை மட்டும் உணர்ந்து கொள்ள முடிகிறது. மன உறுதியின் துணை கொண்டு எதனையும் தைரியமாக எதிர்கொள்வோம்.”

”விழுப்புரம் ரயில் தண்டவாளத்தில் வெடித்த குண்டு வெடிப்புத் தொடர்பாக 33-க்கும் மேற்பட்ட நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்து வருகிறோம் என்று உளவுத்துறை ஐ.ஜி-யான ஜாபர் சேட், விழுப்புரத்தில் பேட்டியளித்துள்ளார்.

உங்களை இது தொடர்பான விசாரணைக்காக அழைத்து சென்றார்களா? உங்களை விசாரித்தார்களா?”

”குண்டுவெடிப்பு நிகழ்ந்த மறுநாள் க்யூ பிரிவு டி.எஸ்.பி. ஒருவர் எங்களை அழைத்து விசாரித்தார். நாங்கள் தொடர்ந்து குடும்பத்தினரோடு இருந்து வருகிறோம் என்றும் சம்பவம் நடந்த முதல் நாள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராகி விட்டு ஊர் திரும்பிய விவரங்களையெல்லாம் சொன்னோம்.

விழுப்புரம் குண்டுவெடிப்பு சம்பவ இடத்தில் இருந்த கடிதத்தின் கையெழுத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க மாதிரி கடிதம் ஒன்றை எழுதித் தரச் சொன்னார். அவ்வாறே எழுதிக் கொடுத்தோம். தேவைப்படும்போது விசாரணைக்கு வர வேண்டும் என்று சொன்னார். வருகிறோம் என்று சொன்னோம். இது தான் நடந்தது.

மற்றபடி, எங்களை அந்த வழக்கு தொடர்பாக யாரும் அழைக்கவுமில்லை. நாங்கள் போகவுமில்லை. அப்படி இருக்கும்போது நாங்கள் தலைமறைவாகி விட்டதாக எப்படிச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

”இதுபோன்ற தகவல்கள் அடிப்படை ஆதாரமே இல்லாமல் எப்படி வெளியாகும்?”

”ஆதாரம் பற்றியெல்லாம் எனக்கோ வெங்கடேசனுக்கோ எதுவும் தெரியாது. ஆனால், ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான் நாங்கள் தெளிவுபடக் கூற முடியும். நாங்கள் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறோம்.

ஒரு நாள் கூட தவறியதில்லை. மேலும், நாங்கள் எங்கு வசித்து வருகிறோம், யாருடன் வசித்து வருகிறோம் என்ற விவரங்களெல்லாம் க்யூ பிரிவு போலீஸ் உட்பட காவல் துறை அதிகாரிகளிடம் இருக்கும் ஆவணங்களில் தெளிவாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அதனை எடுத்து அவர்கள் சோதித்துக் கொள்ளலாம்.

அப்படி, எங்களுடைய நடவடிக்கைகள் முழுவதும் போலீஸ் கண்காணிப்புக்குள் இருக்கும்போது, அவர்கள் கண்களை மறைத்துவிட்டு நாங்கள் என்ன செய்துவிட முடியும். தேவையில்லாத விஷயங்களில் எங்கள் பெயர் அடிபடுவதை நாங்கள் விரும்பவில்லை.

அப்படியிருக்கும்போது அடிப்படையில் துளியும் ஆதாரமில்லாத இந்த மாதிரியான செய்திகள் எங்கிருந்து கிளம்புகிறது என்பது தான் எங்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. இந்த விஷயங்களின் நிஜமான பின்னணி குறித்து எங்களுக்கு யாராவது தகவல் சொன்னால், நாங்களும் அதனை அறிந்து கொள்வோம்.

”உங்களுடைய எதிரிகள் யாராவது இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று சந்தேகப்படுகிறீர்களா?”

”இப்படிப்பட்ட கேவலமான விஷயங்களில் ஈடுபடும் அளவுக்கு எங்களுக்கு எதிரிகள் யாரும் கிடையாது.

மேலும், பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விட்டு, விடுதலையாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில், திடீரென்று இப்படி ஒரு செய்தி ஏன் கிளம்புகிறது என்பதுதான் புரியவில்லை. வியப்பாக உள்ளது.

அப்படியே எங்களுக்கு எதிரி என்றாலும், அவர்கள் இதுபோன்ற மட்டரகமான காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். எங்களுக்கான எதிரிகள் கூட அப்படியொரு மேம்பட்ட மனநிலையில் இருப்பார்கள் என்பதுதான் எங்கள் கணிப்பு. கருத்து.”

”அப்படியென்றால், இந்த தகவலின் பின்னணியில் தமிழக உளவுத் துறை இருக்கும் என்று சந்தேகிக்கிறீர்களா?”

”அது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மாறன் மற்றும் ரேடியோ வெங்கடேசன் தலைமறைவு என்ற செய்தியை வெளியிடும் முன், பத்திரிக்கைகள், என்னையோ, எனது வழக்கறிஞரையோ தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர் செய்தியை வெளியிட்டிருக்கலாம்.

செய்தியை உறுதிப்படுத்தாமல், வதந்தியை செய்தியாக பத்திரிகைகள் வெளியிட்டுள்ளது, கண்டிக்கத்தக்கது. அதற்கு பின்னணியாக இருந்தாலும், அவர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். மற்றபடி, உளவுத்துறை இதில் அத்தனை ஆர்வமெடுத்து செயல்பட்டிருக்குமா என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை...”

”அப்படியென்றால், உங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?”

”நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம் என்று சொல்லி, தவறான செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது, மான நஷ்ட வழக்கு தொடர்வது குறித்து, வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளோம்.

சட்டரீதியிலான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும். ஏனென்றால், யாரும் சொன்னார்கள் என்று சொல்லி தவறான செய்தியை வெளியிடுவதன் மூலம் குடும்பம் என்ன சிக்கலுக்கு ஆளாகும் என்பதை பத்திரிகையாளர்கள் உணர வேண்டும்”

”நீங்கள் தலைவராக இருந்த தமிழ்நாடு விடுதலைப் படை, இதற்கு முன்னர் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதே. இந்த சம்பவத்தில் நீங்கள் ஈடுபடவில்லை என்று சொன்னாலும், உங்கள் அமைப்பைச் சேர்ந்த வேறு யாராவது ஈடுபட்டிருக்கலாம் அல்லவா? அதன் பின்னணியில் நீங்கள் இருந்து செயல்பட்டிருக்கலாம் அல்லவா?”


”எங்கள் அமைப்புச் சேர்ந்தவர்கள் எந்தவொரு காரியத்தைச் செய்தாலும், அதனை நாங்கள் தான் செய்தோம் என்று சொல்லி, அதனை பகிரங்கமாக அறிவித்துவிடுவோம். அதுதான் எங்கள் பாணி. ஏற்கெனவே, நாங்கள் செய்த சில காரியங்களுக்கு ’தமிழ்நாடு விடுதலைப்படை’ பொறுப்பேற்கிறது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறோம். அது தான் எங்களுடைய வழக்கம்.

எந்த வொரு செயலையும் செய்துவிட்டு அதற்கான பொறுப்பை இன்னொருத்தர் மேல் சுமத்த மாட்டோம். அதுமட்டுமல்ல, அப்பாவிகள் பாதிக்கும்படியாக ஒருபோதும் அசம்பாவித சம்பவங்களில் நாங்கள் ஈடுபட்டதில்லை. ஈடுபடவும் மாட்டோம்.

விழுப்புரம் ரயில் தண்டவாளம் பெயர்க்கும் படியாக வைக்கப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தால் ரயில் பாதிக்கப்பட்டிருந்தால், ரயிலில் பயணம் செய்த அப்பாவி பொதுமக்களும், பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியொரு காரியத்தை எங்கள் விடுதலைப்படை இயக்கம் ஒருபோதும் செய்யாது. இப்படிப்பட்ட காரியங்களில் எங்கள் இயக்கத்துக்கு ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை.

”தற்போது உங்களின் தமிழ்நாடு விடுதலைப்படையில் உறுப்பினராக உள்ள யாராவது இதை செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா?”

”2001-ம் ஆண்டு, தமிழ்நாடு விடுதலைப் படை இயக்கம் தடை செய்யப்பட்டது. இதையெதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இயக்கம் தடைசெய்யப்பட்ட பிறகு, இயக்கத்தின் நடவடிக்கைகள் முழுமையாக செயலிழந்து போனது. நானும் சிறையில் இருந்த காரணத்தால், இயக்கத்தின் செயல்பாடும் முற்றிலும் அற்றுப் போனது. இந்நிலையில், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த யாராவது ஒருவர் செய்திருக்கக் கூடுமா என்ற கேள்விக்கே இடம் இல்லை.”

”தற்பொழுது சிறையில் இருந்து வெளியில் வந்திருக்கும் உங்களை, இதுபோன்ற பொய்ச் செய்திகளை வெளியிடுவதன் மூலம், மீண்டும் வன்முறைப் பாதையில் உங்களை திருப்புவதற்கான உத்தியா? நீங்கள் உங்கள் இயக்கத்தை புதுப்பிப்பதற்கான வேலைகள் எதிலும் இறங்கியுள்ளீர்களா?”

”பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அரசியல் பொருளாதார சூழல் இன்று இல்லை. புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னால், சமூக பொருளாதார அரசியல் சூழல்கள் தலைகீழாக மாறியுள்ளன.

இந்த நிலையில், மீண்டும் வன்முறைப் பாதையை தேர்ந்தெடுப்பதோ, ஆயுதப் போராட்டத்தை கையிலெடுப்பது போன்ற எந்த உத்தேசமும் எங்களுக்கு இல்லை. மக்களுக்கான பிரச்னைகளை ஜனநாயக பூர்வமான வழியில் மக்களுடன் இணைந்து, தீர்வு காண்பது என்ற எண்ணத்தில் தான் நானும் எனது நண்பர்களும் இருக்கிறோம்.

அதனால் மீண்டும் வன்முறைப் பாதைக்குச் செல்வோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏதாவதொரு நெருக்கடி கொடுத்து, அரசோ, அல்லது விரும்பத்தகாத சக்திகளோ, எங்களை அவ்வாறு தள்ள முயற்சித்தாலும், நாங்கள் அதற்கு தயாராக இல்லை.”

”உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? அடுத்து என்ன செய்வதாக உத்தேசித்துள்ளீர்கள்?”

”எங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் முடித்துக் கொள்வது மட்டுமே எங்களின் உடனடித் திட்டம். வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை, வேறு எந்தத் திட்டமும் இல்லை. மக்கள் பிரச்னைகளை கையிலெடுத்து, மக்களுக்கான போராட்டங்கள் எதையும் நடத்தும் உத்தேசம் இருந்தாலும், அது ஒரு வெளிப்படையான ஜனநாயக ரீதியான இயக்கமாக இருக்குமே ஒழிய, நிச்சயமாக ஒரு தலைமறைவு இயக்கமாக இருக்காது.''

நன்றி: நம்தினமதி நாளேடு

சவுக்கு

No comments:

Post a Comment