Wednesday, June 2, 2010

திமுக: துரோகங்களின் காலம் 2.





தற்போது அறிவிக்கப் பட்டுள்ள திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் மூன்று பேரும் எப்படி கட்சித் தாவி வந்தவர்கள், அவர்களின் வரலாறு என்ன என்பதைப் பற்றி பார்த்தோம். டி.எம்.செல்வகணபதி குறித்து, பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும் என்பதால், அவர் குறித்து விரிவாகச் செல்லவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம், தந்தைப் பெரியார், கடும் எதிர்ப்பையும் மீறி மணியம்மையை திருமணம் செய்ததால் உருவானது. ஒரு வேளை தந்தை பெரியார், மணியம்மையை திருமணம் செய்யாது போயிருந்தால், திமுக என்று ஒரு இயக்கம் உருவாகாமலே போயிருக்கலாம்.

அன்றைய திமுகவில் இருந்த தலைவர்களும், தொண்டர்களும், ஏறக்குறைய அத்தனை பேருமே, தந்தை பெரியாரால், கவரப்பட்டு, அவர் கொள்கைகளுக்காக அரசியலுக்கு வந்தவர்கள்.

இன்று கரம் கோர்த்து, கூடிக் குலாவி, ஆரத் தழுவி ஆர்ப்பரிக்கும் காங்கிரஸ் கட்சிதான் அன்றைக்கு, திமுக தலைவர்களை தேடித் தேடி கைது செய்தது. 1950ம் ஆண்டு, குன்றத்தூரில் ஒரு சாதாரண பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்து, அக்கூட்டத்தில் தலைமையேற்று பேச இருந்த என்வி.நடராஜனை வழியிலேயே கைது செய்தது காவல்துறை.
1950 முதல், 1958 வரை, மத்தியிலிருந்து, எந்த அமைச்சர்கள் வந்தாலும், அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டப் பட வேண்டும் என்ற கழகத்தின் முடிவை, ஆர்ப்பரிப்போடு, ஏற்று நடத்திக் காட்டினர் திமுக தொண்டர்கள்.

இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களுக்கு, ஜவகர்லால் நேருவும் தப்பவில்லை.
இது போல ஒரு முறை, ஜனவரி 1950 6ம் தேதி, தமிழகம் வர இருந்த ஜவகர்லால் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டப் படும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டது. காங்கிரஸ் அரசு, 31 டிசம்பர் 1957 முதல், அனைத்துப் பொதுக்கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் தடை விதித்தது.


திருவல்லிக்கேணியில் ஜனவரி 3ம் தேதி பொதுக்கூட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு வருகை தரும் வழியிலேயே அண்ணா துரை கைது செய்யப் பட்டார். எம்.ஜி.ராமச்சந்திரன் உட்பட, திமுகவின் பல்வேறு தலைவர்கள் கைது செய்யப் பட்டனர்.
எத்தனை கைதுகள் நடந்தாலும், திட்டமிட்டபடி விமான நிலையத்திலிருந்து வரும் வழியில் கிண்டி அருகே, பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப் பட்டது. இதில் நடந்த தடியடியில் இருவர் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதில் சம்பந்தப் பட்ட அனைவரையும் நான்கு நாட்கள் கழித்து விடுதலை செய்த காங்கிரஸ் அரசு, அனைவருக்கும் 25,000/- அபராதமும், கட்டத் தவறினால் 10 நாட்கள் சிறை என்றும் உத்தரவிட்டது.

அண்ணாதுரை உட்பட அனைவரும் பணம் கட்ட மறுத்து சிறையிலேயே இருந்தனர். ஆனால் காங்கிரஸ் அரசு, அவர்கள் அனைவரையும் நான்கு நாட்களில் விடுதலை செய்து, அதற்க பதிலாக அவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலத்தில் விட்டு, பணத்தை வசூல் செய்தது.


இப்படிப்பட்ட உழைப்பாலும், தியாகத்தாலும் உருவானதுதான் இந்த திமுக. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு, பாமர மக்களின் மத்தியில் அதற்கு வளர்ந்த செல்வாக்குக்கு, எம்ஜிஆரின் கவர்ச்சி ஒரு பெரிய காரணம் என்பதை கருணாநிதியால் கூட மறுக்க முடியாதே ?

எம்ஜிஆர் இறக்கும் வரையில், கருணாநிதியால் எகிறி எகிறிக் குதித்தும், ஆட்சியை பிடிக்க முடியவில்லையே !

திமுகவில் பல போராட்டங்களில் கலந்து கொண்டு, இறக்கும் தருவாயில், நோய் வாய்ப்பட்டு, ஏழ்மையில் கஷ்டப்பட்ட, பன்மொழிப் புலவர், அப்பாதுரைக்கு, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எந்த உதவியும் செய்யவில்லை.

இது போன்ற துரோகங்களை மறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கருணாநிதி, தன்னுடைய வரலாறை தானே “நெஞ்சுக்கு நீதி“ என்று எழுதி வருகிறார்.
பல பேருடைய தியாகங்களிலும், உழைப்பிலும் உருவான இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று யாருக்கப் பதவி ?

கருணாநிதியின், மகன், மகள், பேரன், கொள்ளுப் பேரன், மருமகன், மருமகன் வயிற்றுப் பேரன் என்று, ஆலமரம் விழுதுகள் விடுவது போல, தன் குடும்பத்தை தமிழகம் முழுதும் வளர்த்துள்ள கருணாநிதியின் வாரிசுகள் அல்லவா இன்று யாருக்குப் பதவி என்பதை நிர்ணயிக்கிறார்கள்.




திமுகவின் உயர்நிலைக் குழு என்று பேருக்கு ஒரு கூட்டத்தை கூட்டி, அந்தக் கூட்டத்தில் என்னபோ, அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்து முடிவெடுப்பது போன்ற நாடகம் வேறு.
இப்படி வேறு கட்சிகளுக்குப் போய், அந்தக் கட்சியில் சுகங்களை அனுபவித்து விட்டு, அந்தக் கட்சியில் நெருக்கடி என்றதும், திமுகவுக்குத் தாவி வந்த அரசியல்வாதிகளுக்கு அலங்காரம் செய்து, பட்டாடை போர்த்தி, பதவி கொடுத்து அலங்காரம் பார்க்கும் அவல நிலைக்கு இன்று திமுக இறங்கிப் போய் விட்டது.

இன்றே இந்த நிலையென்றால், நாளை கருணாநிதிக்குப் பிறகு திமுகவின் நிலை என்ன என்று எண்ணிப் பாருங்கள்.

சவுக்கு

2 comments:

  1. திமுகவின் உயர்நிலைக் குழு என்று பேருக்கு ஒரு கூட்டத்தை கூட்டி, அந்தக் கூட்டத்தில் என்னபோ, அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்து முடிவெடுப்பது போன்ற நாடகம் வேறு.//

    வேறு யார்.. நீங்கள் சொன்ன ஆலமர வேர்கள்தான் சார் இந்த உயர்னிலைக்குழு...

    ReplyDelete
  2. Please add, Udhyanidhi Stalin and Dhayanidhi Alagiri in the Family. They already started their involment in Cinema and Politics for next generation tamil nadu people

    ReplyDelete