Saturday, August 14, 2010

எந்திரன் திரை விமர்சனம்.




திருக்குவளை பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆக்டோபஸ் குடும்பத்தின் மேற்பார்வையில் வெளிவந்திருக்கும் படம்தான் எந்திரன்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப் பட்டிருக்கிறது என்ற ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பை படம் கிளப்பியிருக்கிறது. ஆனால் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. திருட்டு விசிடியில் பார்க்கக் கூட இந்தப் படம் லாயக்கில்லை என்று தியேட்டரை விட்டு வெளியே வரும் பார்வையாளர்களின் முணுமுணுப்பை வெளிப்படையாக கேட்க முடிந்தது.

படத்தின் ஹீரோ ரோபோ, ஹீரோவா வில்லனா என்பது கடைசி வரை புரியாத வகையில் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது.

திருக்குவளையில், முத்துவேல் ரோபோ தயாரிப்பு கம்பேனியில் ஒரு பிற்பட்ட ஏழை வகுப்பில் உருவான கருணா ரோபோ எப்படி தமிழ்நாட்டுக்கே நம்பர் ஒன் ரோபோவாக மாறுகிறது என்பதுதான் கதையின் சாரம்.

தொடக்கத்தில் விறுவிறுப்பாக தொடங்குகிறது படம். ஆரம்பக் கட்டத்தில் திருக்குவளையில் இருக்கும் கருணா ரோபோ, திமுக என்ற கம்பெனியில் தனது பாதத்தை மட்டும் எடுத்து வைக்கிறது. பாதத்தை மட்டும் வைத்த ரோபோ, ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்த கதையாக, மொத்த கம்பெனியையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், தனது குட்டி ரோபோக்களை வைத்து, அந்தக் கம்பெனியில் உள்ள மற்ற ரோபோக்களை காலி செய்வது கதையில் விறுவிறுப்பை கூட்டுகிறது.



மற்ற ரோபோக்களைப் போல அல்லாமல், கருணா ரோபோவுக்கு அசாத்திய பேச்சுத் திறமை. மற்ற ரோபோக்கள் தங்கள் பேச்சுக் கலையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கையிலேயே, திமுக கம்பேனியை உருவாக்கிய அண்ணா ரோபோவிடம் நெருக்கமாகிறது கருணா ரோபோ. ஆனால் கருணா ரோபோவுக்கு அண்ணாவிடம் இருக்கும் செல்வாக்கைப் போலவே, எம்ஜிஆர் ரோபோவும், அண்ணா ரோபோவிடம் நெருக்கமாக இருக்கிறது. இது கதாநாயக கருணா ரோபோவுக்கு அறவே பிடிக்கவில்லை.

எம்ஜிஆர் ரோபோவை எதிர்க்கலாம் என்று பார்த்தால், அந்த ரோபோவுக்கு மற்ற ரோபோக்களிடம் இருக்கும் செல்வாக்கு பிரமிக்க வைக்கிறது. சரி வேறு வழியில்லை, உறவாடிக் கெடுக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறது கருணா ரோபோ.


எம்ஜிஆர் ரோபோவிடம் நெருக்கமாக உறவாடி, தன்னை திமுக கம்பேனியின் தலைமைப் பதவிக்கு பரிந்துரைக்குமாறு கருணா ரோபோ கேட்டுக் கொண்டதை எம்ஜிஆர் ரோபோ நம்பி, கருணா ரோபோவை தலைமை பொறுப்புக்கு கொண்டு வருகிறது. ஆனால், கருணா ரோபோ, ஏற்கனவே திட்டமிட்டுருந்தது போல, எம்ஜிஆர் ரோபோவிடம் பேட்டரிகள் எண்ணிக்கை குறைகிறது என்று கணக்கு கேட்டு குற்றம் சாட்டுகிறது. இருக்கும் அத்தனை பேட்டரிகளையும், கருணா ரோபோவிடம் கொடுத்திருந்தும், தன்னிடம் கணக்கு கேட்டதைக் கண்டு அதிர்ச்சியான எம்ஜிஆர் ரோபோ, திமுக கம்பேனியை உடைத்து, அதிமுக என்ற தனிக் கம்பேனியை ஆரம்பிக்கிறது.




இதற்கிடையே இந்திரா என்ற தலைமை ரோபோ, இந்தியா முழுவதும் ரோபோக்களின் நடமாட்டத்தை தடை செய்யும் வகையில், நெருக்கடி நிலை ஒன்றை செயல்படுத்துகிறது. இதையடுத்து, கருணா ரோபோ, இந்திரா ரோபோவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறது.

இந்த நெருக்கடி நிலை சமயத்தில், கருணா ரோபோ, ரோபோ தயாரிப்பில் பேட்டரிகள், சிப்புகள், ஐசிக்கள் வாங்குவதில் முறைகேடு செய்து விட்டதாக, சர்க்காரியா என்ற நீதிபதி ரோபோவை விசாரிக்க உத்தரவிடுகிறார். அந்த சர்க்காரியா ரோபோ, ரோபோக்களுக்கே உரிய நேர்த்தியுடன் கருணா ரோபோ, விஞ்ஞான முறையில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்.

இந்த நீதிபதி ரோபோவின் தொல்லையிலிருந்து விடுபட, இந்திரா ரோபோவிடம், தனது பேட்டரியை கழற்றி காலில் வைத்து மன்னிப்பு கேட்கிறது கருணா ரோபோ. இந்திரா ரோபோவும், போனால் போகிறது என்று நீதிபதி சர்க்காரியா ரோபோ கொடுத்த விசாரணை அறிக்கையை, கழுதை ரோபோக்களுக்கு தின்னக் கொடுத்து விடுகிறார்.

இதற்கிடையே கருணா ரோபோ, ஒரு மூன்று பெண் ரோபோக்களை துணைக்கு சேர்த்துக் கொண்டு ஏகப்பட்ட குட்டி ரோபோக்களை தயாரித்து தமிழகமெங்கும் அனுப்புகிறது. அந்த குட்டி ரோபோக்கள் செய்யும் அட்டூழியங்கள் கடைசியில் கருணா ரோபோவுக்கே வினையாக வந்து முடிகிறது.

எம்ஜிஆர் ரோபோ, பிரிந்து தனிக் கம்பேனி தொடங்கியதும், கருணா ரோபோ, திமுக கம்பேனியை நடத்த முடியாமல் கடும் சிரமப் படுகிறது. எப்படியாவது, எம்ஜிஆர் ரோபோவை ஒழித்து விட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்கிறது. ஆனால் எம்ஜிஆர் ரோபோவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு கருணா ரோபோவை மண்ணைக் கவ்வச் செய்கிறது.

எம்ஜிஆர் ரோபோவுக்கு முக்கியமான இரண்டு சிப்புகளும் பழதடைந்து ரிப்பேர் செய்வதற்காக அமேரிக்காவில் உள்ள ப்ரூக்ளின் ரோபோ ரிப்பேர் கம்பேனிக்கு செல்கிறது. கருணா ரோபோ இந்த கேப்பில் கடா வெட்ட முயற்சி செய்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாமல் கருணா ரோபோ மண்ணைக் கவ்வுகிறது.




இந்நிலையில் எம்ஜிஆர் ரோபோ மிகவும் ரிப்பேராகி, இனி சரிசெய்ய முடியாது என்ற நிலையில் பேட்டரி தீர்ந்து போய் செயலிழந்து விடுகிறது.

இந்த நிலையில் தான் கதையில் இடைவேளை. இடைவேளை முடிந்ததும் எம்ஜிஆர் ரோபோ செயலிழந்து விட்டதால், கருணா ரோபோவுக்கு ரோபோ தலைவர் பதவி கிடைக்கிறது. இனிமேல் கருணா ரோபோவுக்கு எதிரிகளை கிடையாது என்று நினைக்கும் வேளையில், எம்ஜிஆர் ரோபோ கம்பேனியில் இருந்து ஜெயலலிதா என்ற பெண் ரோபோ திடீரேன்று கிளம்பி, கருணா ரோபோவுக்கு பெரும் தலைவலியாக உருவாகிறது.




ஜெயலலிதா ரோபோவுக்கு பின் மற்ற ரோபோக்கள் அணி திரள, கருணா ரோபோ திகைக்கிறது. அகில இந்திய ரோபோக்களின் தலைவன் ஒரு விபத்தில் இறந்ததால் ஏற்பட்ட அனுதாப அலையில் ஜெயலலிதா ரோபோ ரோபோக்கள் தலைவராகிறது. ஆனால் தலைவரானதும், ஜெயலலிதா ரோபோவின் போக்கு மிக மிக மோசமாக இருப்பதால், கருணா ரோபோவுக்கு மீண்டும் அடிக்கிறது யோகம். இப்போது கருணா ரோபோவுக்கு பதவி வந்ததும் ஜெயலலிதா ரோபோவை, கோடவுனில் அடைக்கிறது கருணா ரோபோ. ஜெயலலிதா ரோபோவை சிறையில் அடைப்பது மட்டுமல்லாமல், அந்த ரோபோவுடன் இருக்கும் மற்ற அல்லு சில்லு ரோபோக்களையும் சிறையில் அடைக்கிறது கருணா ரோபோ. ஜெயலலிதா ரோபோ, இவ்வாறு கோடவுனின் அடைத்ததை மறக்காமல், ஐந்து ஆண்டுகள் கழித்து தனக்கு மீண்டும் தலைவர் பதவி கிடைத்ததும், கருணா ரோபோவை நள்ளிரவில் பிடித்து கோடவுனின் அடைக்கிறது. இது கருணா ரோபோவை மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. அவ்வாறு கோடவுனில் அடைக்கையில், கருணா ரோபோ “அய்யோ கொலை பண்றாங்க, அய்யோ கொலை பண்றாங்க“ என்று கதறுவது பெண் பார்வையாளர்களை உருக்குகிறது.

இந்தப் போக்கு இப்படியே தொடரும் நிலையில், கருணா ரோபோவுக்கு மீண்டும் தலைவர் பதவி கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பை கருணா ரோபோ மிக சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்கிறது. தலைவர் பதவி கிடைத்ததும், கருணா ரோபோவின் குட்டி ரோபோக்கள் தமிழகமெங்கும் செய்யும் அட்டூழியங்களை கருணா ரோபோ கண்டு கொள்ளாமல் இருப்பது, கதையின் ஹீரோ கருணாநிதி ரோபோவை வில்லன் போலச் சித்தரிக்கிறது.

இந்த முறை தலைவர் பதவி கிடைத்ததும், கருணா ரோபோ, ஜாபர் சேட் என்ற ஒரு ரோபோவை உருவாக்குகிறது. இந்த ஜாபர் சேட் ரோபோ, மற்ற ரோபோக்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டு கருணாநிதி ரோபோவிடம் சொல்வது போல் அமைந்துள்ள காட்சி மிகவும் புதுமையானது.




உலகில் எந்த ரோபோவும் செய்யாத புதுமையை கருணா ரோபோ செய்கிறது. மற்ற ரோபோக்கள் படும் துன்பத்தை பார்த்து மனம் வருந்தி, உண்ணாவிரதம் இருக்கிறது, மனிதச் சங்கிலி நடத்துகிறது, போராட்டம் நடத்துகிறது. ஆனால் இது எதுவுமே எடுபடாததால் மிகவும் மனம் வருந்துகிறது கருணா ரோபோ.

இந்த வருத்தத்தில் இருந்து விடுபட, ஒரு புதிய கம்பேனியை உருவாக்குகிறது கருணா ரோபோ. அந்த கம்பேனியின் வேலையே, கருணா ரோபோவை பாராட்டுவதுதான். இந்த பாராட்டு மழையில் நனைந்து மற்ற எல்லாவற்றையும் மறந்து ஆனந்தமாக இருக்கிறது கருணா ரோபோ. அந்த பாராட்டு கம்பெனியின் தலைவராக ஜெகதரட்சகன் ரோபோவை நியமிக்கிறது கருணா ரோபோ. அந்தக் கம்பெனியின் மற்ற ரோபோக்கள், துரைமுருகன் ரோபோ, தமிழச்சி ரோபோ, சுப.வீரபாண்டியன் ரோபோ, கமலஹாசன் ரோபோ, ரஜினிகாந்த் ரோபோ, வாலி ரோபோ, வைரமுத்து ரோபோ. இந்த பாராட்டு கம்பேனி ரோபோக்கள் அடிக்கும் கூத்துக்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.

கமலஹாசன் ரோபோ, ரோபோவை கண்டுபிடித்ததே கருணா ரோபோதான் என்று பேச, ரோபோவுக்கு தமிழ் கற்றுத் தந்ததே கருணா ரோபோதான் என்று பேச, வாலி ரோபோ, தமிழ் மட்டுமல்ல, எல்லா மொழிகளையும் கற்றுத் தந்ததே கருணா ரோபோதான் என்று பேச, தியேட்டரில் உள்ள பார்வையாளர்கள், சிகரெட் பிடிக்க கூட்டம் கூட்டாக வெளியே செல்வதை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா ரோபோவின் கதை முடிந்து விட்டது என்று நினைக்கும் வேளையில், ஜெயலலிதா ரோபோ, கோயம்பத்தூரிலும், திருச்சியிலும், ரோபோக்களின் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி கருணா ரோபோவின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்.

இந்த இரு ரோபோக்களுக்கும் நடக்கும் போட்டியின் கிளைமாக்ஸ் 2011ல் நடக்கிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார் என்பதை திரையில் காண்க.

கருணா ரோபோவுக்கு பத்மாவதி ரோபோ, தயாளு ரோபோ, ராசாத்தி ரோபோ என்று மூன்று ஹீரோயின்கள். இந்த மூன்று ஹீரோயின்களில் பத்மாவதி ரோபோவின் பேட்டரி படத்தின் தொடக்கத்திலேயே செயலிழந்து விடுகிறது. மற்ற இரண்டு ஹீரோயின் ரோபோக்களும், திரையில் பெரும் பங்கு வகிக்கவில்லை என்றாலும், கருணா ரோபோ எடுக்கும் முடிவுகளிலும், நடவடிக்கைகளிலும் இவர்களின் பெரும் பங்கு இருக்கிறது என்பதை பார்வையாளர்களால் எளிதாக உணர முடிகிறது.

கருணா ரோபோ, “நான் நின்னா தமிழ், நடந்தா பாரசீகம், பேசுனா உருது, பாடுனா வங்காளம், மொத்தத்துல நான் கலைக்களஞ்சியம்டா“ என்று பேசும் பன்ச் டயலாக்குகள் எடுபடவில்லை.

படத்தின் ஒளிப்பதிவு அழகிரி ரோபோ. வெளிச்சம் பத்தாத இடங்களில், பத்திரிக்கை அலுவலக ஊழியர்களை எரித்து லைட்டிங் எஃபெக்ட் கொடுக்கிறார். ஆடியோ மற்றும் லைட்டிங் ஆற்காடு ரோபோ. பல நேரங்களில் ஆடியோ மந்தமாகவும், லைட்டிங் பற்றாமல், இருட்டில் பல காட்சிகள் எடுக்கப் பட்டிருக்கின்றன.


மொத்தத்தில் எந்திரன், எந்திரிக்காதவன்.

சவுக்கு

43 comments:

  1. திருச்சியில் ஜெயலலிதா ரோபோவுக்கு கூடிய கூட்டம் பார்த்தீர்களா...
    நாற்காலி இப்போதே ஆட்டம் காண்கிறது...

    துணை முதல்வரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் ஓரளவுக்கு நிலைமை சரியாகலாம்...

    ReplyDelete
  2. பாராட்டும் ரோபோ இருக்கட்டும். எதிர்ப்பு ரோபோ என்று சவுக்கு ரோபோ இருக்கிறதே அதைப் பற்றி சொல்லவில்லை. (சும்மா தமாஷ்).

    இறுதியில் சொன்னது உண்மையிலேயே சிரிப்பை வரவழைத்து விட்டது.

    ReplyDelete
  3. எந்திரன், எந்திரிக்காதவன்.........விமர்சனம் பிடிச்சிருக்கு

    ReplyDelete
  4. மிக நல்ல விமர்சனம்
    :-)

    ReplyDelete
  5. ஹாஹா,பஞ்ச் லைன் பத்திகிது.. :)

    ReplyDelete
  6. படத்தில் கருணா ரோபோ செய்யும் சுவையான தேர்தல் தில்லு முள்ளு மற்றும் சொத்தையா “நான் நின்னா தமிழ், நடந்தா பாரசீகம், பேசுனா உருது, பாடுனா வங்காளம், மொத்தத்துல நான் கலைக்களஞ்சியம்டா“ என்று சொல்லி நடத்திய உலக ரோபோ மாநாட்டு காட்சிகளை விமர்சிக்காமல் விட்டுவிட்டீர்களே தோழா........

    ReplyDelete
  7. sema nakkalya ungalukku...
    Be care ful ya... mosamaana aalunga avunga...

    ReplyDelete
  8. Mr.Savukku,

    Why wasting the time writting the same story of MK.write about commenwealth oozhal news.

    ReplyDelete
  9. மிக நடுநிலையான விமர்சனம்....
    எதையும் கடிதம் மூலம் எழுதும் இந்த ரோபோவுக்கு இதையும் கடிதம் மூலம் அனுபவும்....

    நன்றி
    மோகன் பாபு

    ReplyDelete
  10. அட படம் மெகா ஹிட்டு போல........................

    ReplyDelete
  11. We are expecting Part 2 of Endiran Vimarsanam where you will be able to tell about activities of
    Fruit Language Robot- Richest Woman Robot in Asia
    Spectrum King Robot- Scene describing count of one lakh crore by spectrum king is breathtaking
    Fearless Heart Robot
    Russian Leader Robot
    Airlines King/Cable King/Dish King and every business king Robot
    Sidekick news robot such as Third eye Nak--n robot
    dinamalar Robot

    Also mention the role of Savukku robot to bring some sense

    thanks
    A helpless Robot waiting for 2011 to see some future for Tamilnadu and srilanka tamils

    ReplyDelete
  12. //ஏற்கனவே திட்டமிட்டுருந்தது போல, எம்ஜிஆர் ரோபோவிடம் பேட்டரிகள் எண்ணிக்கை குறைகிறது என்று கணக்கு கேட்டு குற்றம் சாட்டுகிறது.// Height of satire! Keep it up!

    ReplyDelete
  13. சவுக்கு ஸார் உங்கள் பதிவில் கருணாநிதியின் ஆட்சிக்கு கவுண்டவுன் கொடுத்திருக்கிறீர்கள்...கவுன் டவுன் முடிந்ததும் ஒரு பேச்சுகாக வைத்துக்கொள்வோம் ஜெ வைத்தவிர வெறு எவரும் ஆட்சிக்கட்டிலில் ஏறமுடியாது. அவர் வந்தால் பிசாசு போய் காட்டேரி வந்த கதைதானே.... இவரது ஆட்சியில் உங்களை கைது செய்த அந்த தகவல் வெளியாக தெரிந்தது.. ஜெ வின் ஆட்சியில் உங்களை நிணைத்தால் ஒரு கொடுங்கனவு மட்டும் தான் எனக்கு தெரிகிறது... பதில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  14. அன்புள்ள நண்பர் ராஜா, உங்கள் அச்சம் நியாயமானது தான். ஜெயலலிதாவின் கடந்த கால செயல்பாடுகளைப் பார்க்கையில் நீங்கள் சொல்லும் கொடுங்கனவு நடக்க சாத்தியமே. எனினும், தற்போது கண்ணுக்கு முன் உள்ள ஆக்டோபஸ் போன்ற பெரிய எதிரியை ஒழித்துக் கட்டுவதே நமது தலையாய பணியாக இருக்க வேண்டும். பின்னூட்டம் இடும் சில அன்பர்கள், அதிமுகவை விமர்சிப்பதில்லை என்று கருத்து கூறியிருந்தார்கள். அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் எதிரியை எதிர்க்கத்தான் துணிவு வேண்டும். அதிமுகவை விமர்சித்து, எதிர்த்தால், தானாகவே திமுகவின் ஆதரவு வந்து சேரும். சவுக்கு கவலைப் படவேண்டியதே இல்லை. அது தேவையில்லை என்றும், இன்று நம் கண் முன் உள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் திமுகதான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஜெயலலிதா தன்னை ஒரு தமிழின ஆதரவாளராகவோ, தமிழின உணர்வாளராவோ சித்தரித்துக் கொண்டதில்லை. ஆனால் கருணாநிதி, உலகில் தமிழினத்திற்கே தலைவன் தான் தான் என்று கூறிக் கொண்டே, ஒரு லட்சம் தமிழர்கள் அழித்து ஒழிக்கப் பட காரணமாக இருந்தார் என்பதை மறந்து விடாதீர்கள். அதனால், ஜெயலலிதாவை விட, கருணாநிதி மிகப் பெரிய தமிழின துரோகி என்றே சவுக்கு பார்க்கிறது.

    ReplyDelete
  15. True.But not only Kaliyuga Dasarathan is responsible.The people of Tamilnadu were enjoying the Tasmac and TV entertainments while their brothers were massacred at Srilanka.The corrupt media of Tamilnadu was also responsible.I remember in 1983 when the Velikadai Jail break news was spread in Tamilnadu every ordinary street walker felt as if he was beaten.Where is the spirit now?What is the reason?

    ReplyDelete
  16. சவுக்கு, ராஜாவிற்கான உங்கள் பதில் திருப்தியளிக்கவில்லை. கலைஞர் நினைத்து இருந்தாலும் இந்திய அரசு நினைத்திருந்தாலும் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தடுத்து இருக்க முடியாது என்பது தான் உண்மை. தமிழின தலைவர் என்று சொல்லிக்கொண்டு என்று நீங்கள் கலைஞரை சாடுவது ஏதோ ஜெ. தன்னை தமிழின காவலர் என்று சொல்லிக்கொள்வதில்லை என்பதெல்லாம் நீங்கள் இன்னொரு சோ என்று தான் நினைக்க தோன்றுகிறது. தனி ஈழம் ஒன்று தான் தீர்வு, தனி ஈழம் அமைப்பேன் என்று ஜெ. முழங்கவில்லையா? தமிழ் நாட்டில் எத்தனையோ வளர்ச்சி திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் தான் நடக்கிறது. வேலை நியமன தடை சட்டம் மூலம் இளைஞர்களின் வேலை வாய்ப்பை கெடுத்தவர் ஜெ. கலைஞர் ஆட்சியில் 3 லட்சம் பேருக்கு மேல் அரசு வேலை கிடைத்துள்ளது. ஜெ. வால் முடியாத கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயலபடுத்தியுள்ளார் கலைஞர். உங்கள் கண்களுக்கு நல்ல விசயம் எதுவும் தெரியாதா? - Puthiyavan

    ReplyDelete
  17. appo Enthiran flop! jamai. jamai. Rajni should be his last movie. What's he acting? still at the age of 70, he's acting as hero. why don''t he act like Amitab? shame up on him!

    ReplyDelete
  18. //எம்ஜிஆர் ரோபோவிடம் பேட்டரிகள் எண்ணிக்கை குறைகிறது என்று கணக்கு கேட்டு குற்றம் சாட்டுகிறது// இது தப்பு, உண்மை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

    //In 1972, DMK leader Karunanithi started project his first son M.K.Muthu in a big way in film industry and also in politics. Understanding the tactics played by Karunanithi to corner him, MGR started to claim that corruption had grown within the party after the demise of Annadurai and in a public meeting asked for the financial details of the party to be publicized which enraged the leadership of DMK. Consequently, as expected, MGR was expelled from the party, and floated a new party named Anna Dravida Munnetra Kazhagam (ADMK), later renamed All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)// http://en.wikipedia.org/wiki/M._G._Ramachandran


    நீங்க தினமணியில இதே கதையை எந்திரன் என்ற பெயருக்குப் பதில் கொள்ளையர்கள், கொள்ளை கூட்டம் போன்ற பெயர்களை மையமாக வைத்து எழுதியபோதே சொன்னேன் கணக்கு கேட்டது எம்.ஜி.ஆர் தான், கருணாநிதி இல்லை என்று, இன்னும் உங்க கதையை திருத்த வில்லையா?

    ReplyDelete
  19. இவர்கள் இருவரை தவிர வேறு வழியே இல்லையா ?ஆறு கோடி மக்களில் நல்ல முதல்வருக்கா பஞ்சமா? என்ன தோழர் சவுக்கு இப்படி புளியை கரைக்கீரிங்க ..என்னமோ போங்க ...உங்களுடைய கவுன்ட்டவுன் அண்ட் சிந்திக்கும் நகைசுவையை வைத்து எதோ மாற்றம் வரும் நம்பிட்டு இருக்கிறோம் என்னை போன்ற பாமரர்கள் ....

    ReplyDelete
  20. நான் ஒரு ஈழத்தமிழன் சிறுவயதில் எம் ஜீ ஆரை நடிப்பில் பிடித்திருந்தாலும், அரசியலில் பேச்சில் தமிழுணர்வில் என்று கருணாநிதியில் கவரப்பட்டு வீணாக ஏமாந்ததுண்டு, இன்றைக்கும் சொல்லுகிறேன் ஜெயலலிதா எங்களை வெறுத்தாலும் கண்டுகொள்ளாவிட்டாலும், நானும்கூட, நானும்கூட என்று ஏமாற்றி கருவறுக்கவில்லை, நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார், கடிதம் கருணாநிதியோ கேடுகெட்ட தனமாக பதவி பணத்திற்காக எமதினத்தின் சகலவற்றையும் மண்ணோடு மண்ணாக்கி அனீதியிழைத்துவிட்டார், எங்களை கருவறுத்து போகட்டும் இனி அவர் சாகும் வயது ஆண்டவன் கிருபையால், மறுபிறவி ஒன்று உண்மையானால், அவர் மனிதனாகப்பிறக்கவேண்டுமென்று ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன் ,ஏனென்றால் சகோதரி கவிஞர் தாமரை சபித்தி விட்ட சாபம்போல, என் அழிந்துபோன ஈழத்து தமிழர்கள் சாகும் தறுவாயில் இயலாமையின் வெளிப்பாடாக திட்டிய சாபம் அவரை சென்றடைய வேண்டும் எனது பங்கிற்கு நான் என்அடிவயிற்றிலிருந்து
    கருணாநிதியை.திட்டுவது


    பேய்கொள்ளும்
    பிணியொடொரு பிரிவும் சேரும்
    பித்தோடு பிடாரிகளும் துணையாயாவர்
    தாய் கண்டு செய் என்று சொல்லாள் அன்று
    தரித்திரமே உருத்திரமாய் கொள்வார் காண
    பாயில்லை சதியில்லை இல்லுமில்லை
    பாண்கிணற்றில் வீழ்ந்ததுபோல் படுவார் நீழ
    நோய்கொண்டு நாய் போல அலைவார் தேம்பி
    நெடுந்துயரம் அவர் கொண்ட பாவம்தானே,

    ReplyDelete
  21. This is best of articles we have seen from you! Keep it up. I am still laughing May GOD save you from these robots.

    ReplyDelete
  22. well well. need more.but what happened to kamarajar story?please reply savukku.

    ReplyDelete
  23. Though the comparison of jayalalitha here is unwarranted,I am compelled to compare the past to the present.In jayalalitha period people were saying that Sasikala is buying properties here and there that is in Tamilnadu.As of now every village has a sasikala,every town has a sasikala,every state has a sasikala,every country has a sasikala,not the earlier Sasikala but thy's,mozhis,giris,rasas marans and each and every DMK functionaries purchasing whatever available, Forests,Mountains,Plains,Road,buildings,press,political and religious parties ,opposition parties,not by threatening like that of Sasikala,but by money.Threaneting is done by only the bureaucrats, the paid slaves of the Government just to save their skin.Let the people who are in semi unconscious stage decide before their intellectuals are eaten by the black money sharks.

    ReplyDelete
  24. Good article. Please continue, not only with Karuna and others Govt. People also.

    ReplyDelete
  25. Your earlier blogs were interesting as they were based on facts and deeds happening behind the screen... It was very much interesting to know the truths...

    Sameebamaaga veli vandha irandu blogugalum pakkangalai nirapuvathaga ullathu.. aangilathil 'Form without substance' enru kooruvaargal, we expect and would love to have 'substance with/without form'

    ReplyDelete
  26. ரமணி
    சவுக்கே பிண்ணி எடுக்கிறிங்க. நல்ல ஒரு விமர்சனம் மற்றும் சிந்திக்க வைக்கும் அரசியல் நாடக வியூகம்.
    நிச்சயம் ஒவ்வொரு தமிழரும் இதனை மகிழ்ந்து வாசிப்பார்கள் . பல லட்சம் தமிழர்களை கொன்றுகுவித்ததை தமக்கான பாராட்டுகளிலே துரோகத்தை மறைத்துவிட துடிக்கும் தமிழக அரசின் சாணக்கியத்தையும் எத்தனை மாநாடு நடந்தாலும் தமிழன் உன்னை (துரோகத்தை) மறக்க வில்லை என்பதையும் நினைவூட்டும் சவுக்கின் பணி இளையவர்களின் விழிப்புணர்வுக்கான இணையதள பணி.

    ReplyDelete
  27. இதற்கு நடுவில் EVKS, தங்கபாலு போன்ற காமெடீ ரோபோகள் லொள்ளு வேற

    ReplyDelete
  28. In a democracy if we have to finish an enemy we must become friend of enemy's enemy. If we don't support Jayalalitha then no other force can stop Karuna from becoming CM again.After that nothing will be left in Tamilnadu and in Eelam it will be silence of graveyard.
    So whether we like or not we have to follow Savukku's policy. I am sure once AIADMK wins Vaiko will play an important role in shaping eelam policy. Please understand that Jaya may be one of the richest in Tamilnadu but Karuna family is one of the richest in the world.
    And dont forget loot of one lakh crores. Any one who supports policy of dethroning Karuna should support Savukku's stand.
    Today we are at the crossroads of our democracy where one family rule is becoming the order of the day.
    Let us for once give a chance to Jaya
    robin

    ReplyDelete
  29. மிக நடுநிலையான விமர்சனம்....

    prakash vengamedu

    ReplyDelete
  30. சவுக்கு அண்ணா
    கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே ஒன்று தான்.
    ஆகையால் இருவரையும் பற்றியும் எழுதவும்.
    இப்படிக்கு அன்பு தம்பி,
    சின்னபையன்...

    ReplyDelete
  31. // ஜெயலலிதா தன்னை ஒரு தமிழின ஆதரவாளராகவோ, தமிழின உணர்வாளராவோ சித்தரித்துக் கொண்டதில்லை. ஆனால் கருணாநிதி, உலகில் தமிழினத்திற்கே தலைவன் தான் தான் என்று கூறிக் கொண்டே, ஒரு லட்சம் தமிழர்கள் அழித்து ஒழிக்கப் பட காரணமாக இருந்தார் என்பதை மறந்து விடாதீர்கள். அதனால், ஜெயலலிதாவை விட, கருணாநிதி மிகப் பெரிய தமிழின துரோகி என்றே சவுக்கு பார்க்கிறது//
    correcta sonnenga savukku sir!!!

    //எம்ஜிஆர் ரோபோவிடம் நெருக்கமாக உறவாடி, தன்னை திமுக கம்பேனியின் தலைமைப் பதவிக்கு பரிந்துரைக்குமாறு கருணா ரோபோ கேட்டுக் கொண்டதை எம்ஜிஆர் ரோபோ நம்பி, கருணா ரோபோவை தலைமை பொறுப்புக்கு கொண்டு வருகிறது//
    pagayali kudumbathai uravaadi keduppathu enbathil avargal ph.d pattam petrullanar savukku sir!
    //இதற்கு நடுவில் EVKS, தங்கபாலு போன்ற காமெடீ ரோபோகள் லொள்ளு வேற//
    hahahaha
    //
    கருணா ரோபோ, “நான் நின்னா தமிழ், நடந்தா பாரசீகம், பேசுனா உருது, பாடுனா வங்காளம், மொத்தத்துல நான் கலைக்களஞ்சியம்டா“//
    hahahahaha soooooooooper punch.....
    //மொத்தத்தில் எந்திரன், எந்திரிக்காதவன்.//
    KALAKKAL boss.......

    ReplyDelete
  32. அன்புள்ள சவுக்கு வாசகர்களூக்கு,
    தமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரம் நம்ப சவுக்கு தான்...
    சூப்பர் கீப் இட் அப்

    ReplyDelete
  33. Dear Savuku,

    Mr.Karunanithi know at least how to rule at least 50% useful for people 50% useful for their family members.
    Ms jayalalitha used tesma to fear the govt servants and govt servants all know their height in govt after their dismiss and arrest . After she went to court and case and all peoples know how to tackle court and how can handle the court .Honestly after jaya case 80% peoples know their is big hole in cases and court to escape.Than this i don't know what jayalalitha done for TN if anybody know please advise.Only tamilnadu peoples know whole family members of sasikala .This any use for peoples ?

    ReplyDelete
  34. tamil enathai kontru kuvitha kunanithi sagum nalai yathir noki erukkum ezha tamilan.

    ReplyDelete
  35. //படத்தின் ஒளிப்பதிவு அழகிரி ரோபோ. வெளிச்சம் பத்தாத இடங்களில், பத்திரிக்கை அலுவலக ஊழியர்களை எரித்து லைட்டிங் எஃபெக்ட் கொடுக்கிறார். ஆடியோ மற்றும் லைட்டிங் ஆற்காடு ரோபோ. பல நேரங்களில் ஆடியோ மந்தமாகவும், லைட்டிங் பற்றாமல், இருட்டில் பல காட்சிகள் எடுக்கப் பட்டிருக்கின்றன.


    மொத்தத்தில் எந்திரன், எந்திரிக்காதவன்.//

    கடைசி வரி நச்....

    ReplyDelete
  36. A Very amazing article.... I love this robot story very much... I hope U will also write about Toy Story...... Take care... Good Luck

    ReplyDelete
  37. whether it is kalaigar or Jaya , nobody is perfect,and moreover, who ever comes to power they will not do anything for lankan tamils, rather they cannot do anything in this regard, except seeking Indian govt to look into it. So dont blame anybody else.

    ReplyDelete
  38. Can't stop laugh. But you're a little bit in favour of Ms.Jeyalalitha. Please reduce it. Unless we can't see your posts as a neutralized one.

    ReplyDelete
  39. oruvarin muthirvai (elunthirikathavan) nakkal seyvathu rasikkavillai, mattrapadi ellame marukka mudiatha unmaigal.... veluthu kattu...

    ReplyDelete
  40. brother, unnai padikkum podhu sindhikkavum mudiyuthu sirikkavum mudiyudhu

    ReplyDelete
  41. padam enna theatrela ooduthu

    ReplyDelete
  42. பேய்கொள்ளும்
    பிணியொடொரு பிரிவும் சேரும்
    பித்தோடு பிடாரிகளும் துணையாயாவர்
    தாய் கண்டு செய் என்று சொல்லாள் அன்று
    தரித்திரமே உருத்திரமாய் கொள்வார் காண
    பாயில்லை சதியில்லை இல்லுமில்லை
    பாண்கிணற்றில் வீழ்ந்ததுபோல் படுவார் நீழ
    நோய்கொண்டு நாய் போல அலைவார் தேம்பி
    நெடுந்துயரம் அவர் கொண்ட பாவம்தானே, -------- சவுக்கின் விமர்சனம் சரியா தப்பா என்பது 2011 மே மாதம் தெரியும்

    ReplyDelete